(கடந்த வார தொடர்ச்சி)
கோவலன்சிலப்பதிகாரத்தில் கோவலனின் குற்றம் என்னவென்று எல்லோருக்குமே தெரியும். தொடக்கத்தில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வணிகத்தை அவன் பொறுப்புடனேயே செய்திருக்கிறான். ஆகவேதான் அவனது சரிவைக் கண்டு புகார் நகரின் சக வணிகர்கள் வருந்துகிறார்கள். ஆனால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இல் வாழ்க்கையை, கண்ணகியுடன் படுக்கை இன்பத்தைத் துய்த்தான் என்பதன்றி, வேறு எவ்வகையிலும் அவன் பொறுப்புடன் மேற்கொள்ளவில்லை.
மாதவியின் ஆடற்கலையை ரசித்தவன், அவளது அழகிய மேனியையும் ருசிக்க முடிவு செய்கிறான், மாதவியின் தாய் நிர்ணயிக்கும் ‘ஆயிரத்து எண் கழஞ்சு’ தங்கம் என்ற விலையைக் கொடுக்கிறான். அதன்பின் கண்ணகியை அடியோடு மறக்கிறான். மனைவியானாலும் சரி, ஆடற்பெண்ணானாலும் சரி ஆணின் நுகர்வுக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டியவர்களே என்றிருந்த பாலினப் பாகுபாட்டு அநீதியை முற்றிலும் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டவன்தான் கோவலன்.

ஆகவேதான், மாதவியிடமும் முழுப் பாசத்தோடு இல்லாமல், அவள் இந்திர
விழாவில் தன் கவித்திறன் காட்டிப் பாடிய பாட்டைப் பாட்டாக எடுத்துக்கொள்ளாமல், அதற்கு உள்ளர்த்தம் கற்பித்து, அவள் மீது சந்தேகம் கொள்கிறான் (இன்றைக்கும் கூட பெண்கள் தங்கள் காதல், காமம் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் ஒழுக்கக் கேடாகத்தானே கரித்துக்கொட்டப்படுகிறது!) மாதவியுடன் மனம் திறந்து பேசுகிற நேர்மை இல்லாமல், அவளை விட்டுப் பிரிந்து மறுபடி கண்ணகியிடம் வந்து சேர்கிறான். கண்ணகியிடம் கூட தன் தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்கிற பண்பு இல்லாமல், கவுரவம் காக்க ஊரை விட்டுப் போவது பற்றியே பேசுகிறான். மோகத்தால் தன் தொழிலில் தொடர்ந்து கவனம் செலுத்தி அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால்தான், மதுரையில் தன்னை ஏமாற்றும் நோக்கத்துடன் அணுகும் பொற்கொல்லனின் ஆடையைப் பார்த்து, அவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்று நம்பி ஏமாறுகிறான். கள்வனென்று குற்றம் சாட்டப்பட்டு உயிரையே இழக்கும் நிலைக்கு அது இட்டுச் செல்கிறது.

மாதவி, மாநாய்கன், மாசாத்துவான்:
எந்த அளவுக்குக் கோவலன் மேல் அளவிட முடியாத காதல் கொண்டிருக்கிறாளோ, அதே அளவுக்கு கண்ணகி வஞ்சிக்கப்படுவது பற்றிய உறுத்தலோ கவலையோ இல்லாதவளாக இருக்கிறாள். மாதவி தன் பாட்டுக்காக அவமதித்துப் பிரிகிறவனை சுயமரியாதையுடன் சாடாமல், அவனுக்காக ஏங்கி மடல் அனுப்புகிறாள். கண்ணகியின் தந்தை மாநாய்கன், கோவலனின் தந்தை மாசாத்துவான் ஆகியோரும் தவறு செய்தவர்களே. புகாரின் மிகச் சிறந்த, வெற்றிகரமான வணிகர்களான இருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு மணமுடிக்கப் பொருத்தம் பேசியவர்கள் பொருள் பொருத்தம், நாள் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், ராசிப்
பொருத்தம் என்று எல்லாம் பார்த்தார்கள். கண்ணகி, கோவலனின் மனப்பொருத்தம் பார்க்கவில்லையே! அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்று பார்த்துத் தலையிடவில்லையே! பின்னொரு கட்டத்தில்தான் மனம் வருந்தி ஒருவர் வெளியூர் செல்கிறார், இன்னொருவர் துறவு மேற்கொள்கிறார்.

பாண்டியன், பாண்டிமாதேவி:
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் குற்றம் சிலப்பதிகாரம் அறிந்தவர்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். அரண்மனைக்குச் சொந்தமான காற்சிலம்பைக் கோவலன் திருடிவிட்டான் என்று சுயநல நோக்கத்துடன் பொற்கொல்லன் சொன்னதை நம்பி, ஊருக்குப் புதியவனைத் தன் முன் வரவழைத்துத் தானே விசாரித்து முடிவுக்கு வராத குற்றம், படைத் தலைவனிடமே விசாரிக்கிற பொறுப்பை அளித்த குற்றம் என்று நீதி சொல் அரசனுக்குரிய கடமையிலிருந்து வழுவுகிறான். ‘துன்னிய மந்திரம் துணை எனக்கொண்டு’ கோவலன் அரண்மனைச் சிலம்பைத் திருடியதாய்ப் பொற்கொல்லன் சொல்கிறபோது, மந்திரத்தால் அப்படி
யெல்லாம் செய்ய முடியுமா என்று சிந்திக்கிற பகுத்தறிவும் மன்னனுக்கு இல்லாமல் போனதே! தன் கடமையை முறையாக நிறைவேற்றியிருப்பானானால், பின்னர் உண்மை தெரிந்ததும் மாரடைப்பில் மரணமடைகிற நிலை ஏற்பட்டிருக்காது, ஒரு மன்னனை அந்த நாடு இழந்திருக்காது.

அரசியார் பாண்டிமாதேவியும் கூட, அந்தப்புரத்தில் பிற பெண்களுடன் சுகித்திருக்கும் கணவன் மேல் கோபம் கொள்ளவில்லை. அந்தப் பெண்களுக்காகவும் பேசவில்லை. அரசனிடம் ‘ஆராயாமல் ஆணையிடலாமா’ என்று கேட்கவில்லை. அதனால் அவளும் தன் கணவனை இழக்கிறாள், நாடு தன் அரசியையும் இழக்கிறது. பொற்கொல்லனின் திருட்டும் பொய்யும்தான் அடுத்தடுத்த தீய விளைவுகளுக்கெல்லாம் காரணம். கோவலனை விசாரிக்கும் படைத்தலைவன் சரியான முடிவுக்கு வந்துவிடாமல் தடுப்பதற்காக அந்த இடத்திலும் நாடகமாடுகிறான்.

துறவியும்…
இவ்வளவு ஏன், நேயமிக்க துறவியான கவுந்தியடிகள் கூட தவறு செய்கிறார். மதுரைக்குப் புறப்பட்ட கண்ணகியையும் கோவலனையும் தன் பொறுப்பில் இட்டுச் செல்கிறார் அடிகள். வழியில் சிலர் அந்த இருவரையும் இழிவுபடுத்திப் பேசுகிறார்கள். கவுந்தியடிகள் அவர்கள் மேல் சினம்கொண்டு சாபமிடுகிறார். இழிவாகப் பேசியவர்கள் நரியாக மாறுகிறார்கள். பின்னர் கண்ணகியும் கோவலனும் தலையிட்டு, அறியாமல் பேசியவர்கள் மீது துறவிக்கு இத்தனை கோபம் வரலாமா என்று கேட்டு, அவர்களை மன்னிக்கச் சொல்கிறார்கள். அவரும் சினம் தணிந்து சாபத்தை விலக்கிக்கொள்கிறார்.

இப்படி தவறே இல்லாதவர்களின் செயற்கையான கதையாக வடிக்காமல், தவறு செய்தவர்களின் இயல்பான வாழ்க்கையை எடுத்துரைக்கிறது ‘சிலப்பதிகாரம்’. அந்தத் தவறுகளைச் சொன்னதன் மூலம், அரசாங்கத்தைத் தட்டிக்கேட்கத் துணியாமலிருக்கிற, கணவனை மனைவி ஏனென்று கேளாமலிருக்கிற, வெறும் நாள் நட்சத்திர ஜாதக நம்பிக்கைகளில் இல்வாழ்க்கைக்கான இணைகளைச் சேர்க்கிற, உடலும் உள்ளமும் பக்குவத்திற்கு வராத சிறார் பருவத்தில் திருமணம் செய்துவைக்கிற தவறுகளைச் செய்யாதீர்கள் என்று இன்றைய குடிமக்களுக்கும் சொல்லாமல் சொல்கிறது இந்தக் குடிமக்கள் காப்பியம்.

Leave A Reply

%d bloggers like this: