புதுதில்லி, ஆக. 26-

ஹரியானா முதல்வர் நீக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றுவரும் வன்முறை வெறியாட்டங்களில் இதுவரை 35 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள், 250க்கும் மேற்பட்டோர் கொடுங்காயங்கள்  அடைந்துள்ளார்கள்.  இச்சம்பவங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேரா சச்சா சௌதா என்னும் அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரகிம் சிங் என்பவர் வன்புணர்வுக் குற்ற வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது  ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டார்கள்.  தீர்ப்பின் முடிவை எதிர்பார்த்துக் கடந்த சில நாட்களாகவே இவர்கள் வழக்கு விசாரணை நடைபெறும் பஞ்ச்குலா என்னுமிடத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன்  திரண்டார்கள்.

இவ்வாறு சாமியாரின் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டுவந்துள்ள போதிலும், அவர்கள் மூலம் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படக்கூடும் என்று ஹர்யானா முதல்வரோ அல்லது பாஜக அரசாங்கமோ எதிர்பார்த்து அவற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் எதையும் எடுத்திடவில்லை. இவ்வாறு மிக மோசமான முறையில் இவர்கள் கடமை தவறியதன் காரணமாக மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலையும் நிலை உருவாகியுள்ளது.

முன்னதாக, மாநில முதல்வரும், பாஜக எம்எல்ஏக்களும் மேற்படி (ஆ)சாமியை அணுகி, அவரிடம் ஆசிர்வாதங்கள் பெற்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நபருடன் எந்த அளவுக்கு மென்மையான முறையில் பாஜகவினர் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

இம்மாநிலத்தில் பாஜக அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இவ்வாறு சட்டம் – ஒழுங்கு சீர்குலைவது இது மூன்றாவது முறையாகும்.  ராம்பால் வழக்கு விஷயத்தில் ஏற்பட்ட மோதல், ஜாட் இனத்தவரின் கிளர்ச்சிப் போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது மூன்றாவதாக இந்நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. ஹரியானாவில் பாஜக அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டது. ஹர்யானா உயர்நீதிமன்றமும் கூட தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுமாறு மாநில அரசாங்கத்திற்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறது. கடந்த கால வரலாற்றைப் பார்க்குங்கால் அவ்வாறு எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்குமா என்கிற ஐயுறவுகள் நீதிமன்றத்திற்கே ஏற்பட்டிருக்கிறது.  இத்தகைய தவறுகளை மீளவும் செய்யக்கூடாது என்று மாநில அரசாங்கத்தை உயர்நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.

ஹரியானா மாநில அரசாங்கமும், முதலமைச்சரும் பதவியில் இனியும் நீடிக்க முடியாது. முதலமைச்சர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: