===கே.ஏ.தேவராஜன்===
ரஷ்யப்புரட்சிக்கு முன்பு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்திருக்க வில்லை. இந்திய தேசியபக்த தீவிரவாதி களில் சிலர் அயல்நாடுகளில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட வும், ஆயுதங்கள் சேகரித்து அனுப்பவும் உலகின்
பல இடங்களுக்கு சென்றனர்.

ஆங்காங்கே செயல்பட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு களுடனும் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்துடனும் தொடர்பு கொண்டனர்.

1920இல் மாஸ்கோவில் நடந்த மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் எம்.என்.ராயும், ஈவ்லின் ராயும் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் அபானி முகர்ஜியும், எம்.பி.டி. ஆச்சார்யாவும், முகமது ஷபீக்கும் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
புரட்சிக்குப் பின்பு சோவியத் அரசு,

கிழக்குலக நாடுகளின் புரட்சியாளர்களுக்காக மாஸ்கோவில் கிழக்கிந்திய பல்கலைக் கழகத்தை நிறுவியது. இப்பல்கலை.யில் மார்க்சிய கல்வியும் புரட்சிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்தியர்கள் பலரும் இந்தப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மார்க்சியம் கற்று கம்யூனிஸ்ட்டுகளாயினர்.

இந்தியாவில் கிலாபத் இயக்கம் தோல்வி யுற்றதைத் தொடர்ந்து பிரிட்டிஷாரின் அடக்கு
முறைக்கு அஞ்சி முஸ்லிம்களில் சில தீவிர வாதிகள் (முஜாஹீர்) மாஸ்கோவிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கிழக்கந்தியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மார்க்சியம் கற்று கம்யூனிஸ்டுகளாயினர்.

பல்கலை.யில் பயிற்சி முடித்த பல இந்தியர்கள் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாஸ்கோ, தஜிக்ஸ்தான், தாஷ் கண்ட், கிர்கிஸ்தான் முதலான கிளைகளில் உறுப்பினராகச் செயல்பட்டனர். இத்தகைய கம்யூனிஸ்ட்டுகள் அனைவரும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பிச்சென்று கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று மூன்றா வது அகிலம் முடிவு செய்தது.
முதல் கிளை உதயம்

தாஷ்கண்டில் 17.10.1920 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கிளை அமைக்கப்பட்டது. அதில் கீழ்க்காணும் 7 தோழர்கள் உறுப்பினர்கள்.எம்.என்.ராய், ஈவ்லீன் (எம்.என்.ராயின் அமெரிக்க மனைவி), அபானி முகர்ஜி, சோசா- (அபானி முகர்ஜியின் ரஷ்ய மனைவி), முகமது ஷபீக் – (கிளைச் செயலாளர்), எம்.பி.டி ஆச்சார்யா, முகமது அலி,

சிபிஎம் மத்தியக் குழு இந்தக் கிளையைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை என்று அங்கீகரித்தது. ஆனால் சிபிஐ இதை ஏற்கவில்லை.

பெஷாவர் – தாஷ்கண்ட் – மாஸ்கோ சதி வழக்கு
ரஷ்யப் புரட்சியின் வடக்கு வாடைக்காற்று இமயத்தைத் தாண்டி இந்தியாவிற்குள் வீசிவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் ஆட்சி மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தது. முளையிலேயே கிள்ளி எறிய எண்ணினர்.

கம்யூனிஸ்ட்டுகளும், அவர்களுடைய நூல்கள், பிரசுரங்கள், அறிக்கைகள், கடிதங்கள் எதுவும் இந்தியாவில் நுழையாதவாறு எல்லா எல்லைகளையும் அடைத்துவிட்டனர்.புவியியல் அமைப்புப் படி சோவியத் யூனியனிலிருந்து இமயத்தையொட்டியுள்ள தஜிகிஸ்தானின் தாஷ்கண்ட், ஆப்கானின் காபூல் வழியாகத்தான் இந்தியாவிற்குள் வந்தாக வேண்டும்.

இந்தியாவின் எல்லை ஓரம் பெஷாவார் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) உள்ளது. இமயமலை, இந்துகுஷ் மலைகளின் பனிபடர்ந்த சிகரங்கள், காட்டாறுகள் பலவற்றையும் கடந்து தான் இந்தியாவிற்கு பயணித்தாக வேண்டும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் உதவியுடன் இந்தியர்கள் பல குழுக்களாக எல்லைவரை கொண்டு வந்து விடப்பட்டனர். இதை மோப்பம் பிடித்து எதிர்பார்த்து காத்திருந்த பிரிட்டிஷ் அரசு அவர்களில் ஏராளமானவர்களை கைது செய்து ‘பெஷாவர் சதி வழக்கு’ என்ற வழக்கு தொடுத்து ஓராண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளித்தது. எனினும் சிலர் இந்தியாவிற்குள் தப்பி வந்துவிட்டனர்.

இந்தியாவின் நான்கு மூலைகளிலும் ரஷ்யப்புரட்சியின் தாக்கத்தால் இந்தியாவில் தீவிர தேசியவாதிகள் பலர் கம்யூனிஸ்ட்டுகளாக மாறினர். நாட்டின் நான்கு மூலைகளிலும் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்றின.

1.கல்கத்தா 1921இல் முசாபர் அகமது தலைமையில் கட்சி அமைப்பு ஒன்று உருவாயிற்று. இந்தக் குழு ‘கனவாணி’ என்ற பத்திரிகையை வெளியிட்டது.

2. பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே தலைமையில் ஒரு கட்சிக் குழு இயங்கியது. இந்தக்குழு ‘சோஷலிஸ்ட்’ என்ற பத்திரிகையை வெளியிட்டது.

3. லாகூரில் குலாம் முகமது தலைமையில் ஒரு கட்சிக்குழு இயங்கியது. இந்தக்குழு ‘இன்குலாப்’ என்ற பத்திரிகையை வெளியிட்டது.

4. இதே காலத்தில் சென்னையில் சிங்காரவேலர் தலைமையில் ஒரு கம்யூனிஸ்ட்டுக் குழு இயங்கியது. இந்தக்குழு ‘கிசான் லேபர் கெஜட்’ என்ற ஒரு பத்திரிகை நடத்தியது.
இந்தப் பத்திரிகைகள் அனைத்தும் கம்யூனிசக் கருத்துக்களையும், ரஷ்யப் புரட்சியைப் பற்றியும் மக்கள் மத்தியில் விரிவாகக் கொண்டு சென்றன.இந்தக் குழுக்கள் எல்லாம் தனித்தனியாகவே இயங்கின. ஒன்றுபட்ட ஒரு இந்தியக் கட்சியாக அப்போது உருவாகவில்லை.

பரிபூரண சுதந்திர முழக்கம்
1921இல் காங்கிரஸ் கட்சியின் அ.இ.மாநாடு அகமதாபாத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் விநியோகிப்பதற்காக ‘காங்கிரசுக்கு கம்யூனிஸ்ட் வேண்டுகோள்’ என்று தலைப்பிட்டு ஒரு அறிக்கை தாஷ்கண்ட் கிளையில் தயாரிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் எம்.என்.ராயும், அபானிமுகர்ஜியும் கையெழுத்திட்டிருந்தனர். தாஷ்கட்டிலேயே அவை அச்சடிக்கப்பட்டு ரகசியமாக அகமதாபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மௌலானா ஹஜ்ரத் மொகானி என்ற இடதுசாரி காங்கிரஸ் தலைவர் உதவியுடன் அந்த அறிக்கைகள் மாநாட்டில் விநியோகிக்கப்பட்டன.

அந்த அறிக்கையில் இந்தியாவிற்குப் பரிபூரண சுதந்திரம், மேலும் இந்திய விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. பரிபூரணச் சுதந்திரக் கோரிக்கைச் செய்தி அப்போதைய பத்திரிகைகள் சிலவற்றிலும் வெளிவந்தன. கம்யூனிஸ்ட்டுகளின் கருத்துக்கள் நாடெங்கிலும் பரவத் தொடங்கின.

அடுத்த ஆண்டு 1922இல் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் சென்னையிலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்த சிங்காரவேலர், அகமதாபாத் அறிக்கையில் கூறப்பட்ட அதே கருத்தை தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று தன்னைப் பிரகடனம் செய்து கொண்டே முன்மொழிந்தார். ஆனால், காங்கிரஸ் அதை ஏற்கவில்லை; காந்திஜியும், ‘சிறுபிள்ளைத் தனமானது’ என்று கூறி நிராகரித்தார். எனினும் கம்யூனிசக் கருத்துக்கள் பரவவே செய்தன.

கான்பூர் சதிவழக்கு
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நினைத்தது போன்று இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவதை முளையிலே கிள்ளி எறிய இயலவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் இங்கும் மங்கும் தொடங்கிய கம்யூனிசப் பிரச்சாரம் காட்டுத் தீயாய்ப் பரவுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு மேலும் எச்சரிக்கையாகி அடுத்த தாக்குதலுக்கு தயாராகியது. இந்தியாவில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு தளங்களில் இயங்கிய முக்கிய கம்யூனிஸ்ட்டுகள் அனைவரையும் ஒன்று சேர்த்து 1924 பிப்ரவரியில் கான்பூர் சதிவழக்கு என்ற ஒரு வழக்கை ஜோடித்தனர். அந்த வழக்கில் எட்டுத் தோழர்களை எதிரிகளாகச் சேர்த்தனர்.

எம்.என்.ராய், ராம்சரண்லால் சர்மா, சிங்காரவேலர், குலாம் உசேன் ஆகியோர் நால்வரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, நளினிதாஸ் குப்தா, சௌகத் உஸ்மான் ஆகியோர் நால்வர் மீது மட்டுமே வழக்கு நடந்தது. என்ன குற்றச்சாட்டு?
‘‘ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் அகிலம் என்னும் புரட்சி ஸ்தாபனம் உள்ளது.

எம்.என்.ராயின் கட்டுப்பாட்டில் அகிலத்தின் ஒரு கிளையை இந்தியாவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கங்களில் ஒன்று இந்தியாவில் இருக்கும் நமது சக்கரவர்த்தியின் ஆட்சியை அகற்றுவதாகும்.’’இவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட நான்கு தோழர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கின் குற்றச்சாட்டு, சாட்சியங்கள், விசாரணைகள், தீர்ப்புகள் முதலான எல்லா முனைகளிலும் கம்யூனிசப் பிரச்சாரத்திற்கான வாய்ப்புக்களாகப் பயன்படுத்தப்பட்டன. நாடெங்கிலும் கம்யூனிஸ்ட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே சமயம் முறைப்படுத்தப்பட்டதும், மையப்படுத்தப்பட்டதும், ஒருங்கிணைந்ததுமான ஒரு கட்சி ஸ்தாபனம் தேவை என்பது உணரப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு 1925இல் அதே கான்பூரில் அகில இந்திய மாநாடு நடந்தது. இந்த மாநாடு நமது முன்னோடி சிங்காரவேலர் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.