ஞாநி
எழுத்தாளர்

பெறுநர்:
மாண்பு மிகு தமிழக முதலமைச்சர்
திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள்,

மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர்
திரு செங்கோட்டையன் அவர்கள்.

அன்புடையீர், வணக்கம்.

இந்தக் கடிதம் உங்கள் இருவருக்குமானது. நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழகக் கல்வித் துறையில் குறிப்பாக பள்ளிக் கல்வியில் பல முக்கியமான மாற்றங்களை முன்னெடுத்தீர்கள். அவை நிகழக் காரணமாக இருந்தவர் செயலர் திரு .உதயசந்திரன் என்பதை நீங்களும் அறிவீர்கள். நாடும் அறியும்.

குறைந்தபட்சம் அடுத்த ஐந்தாண்டுகளேனும் அவர் அப்பொறுப்பில் நீடித்தால்தான் அவரும் நீங்களும் தொடங்கி வைத்த கல்வித்துறை சீர்திருத்தங்கள் முழுமையடையும் என்பதையும் நீங்கள் அறியாதவர்கள் அல்ல.

இந்நிலையில் அவரை பாடத்திட்டத்துக்கு மட்டுமே இனி பொறுப்பு என்று குறுக்கி அறிவித்திருப்பது உங்கள் ஆட்சி பற்றி பல சந்தேகங்களை எழுப்புகிறது. கல்வித் துறை சீர்திருத்தம் என்பது பாடத்திட்டம் மட்டும் அல்ல. ஆசிரியர் நியமனம், மாற்றல், பள்ளி அங்கீகாரம், ஆசிரியர் பயிற்சி , பாட நூல் வெளியீடு என்று பல முக்கிய அம்சங்கள் உள்ளன. இவற்றில் இனி திரு. உதயசந்திரன் செயல்படக் கூடாது என்று நீக்கியிருப்பது பல பத்திரிகைகள் ஏற்கனவே எழுப்பியுள்ள சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது. லஞ்சமும் ஊழலும் செய்யக் கூடிய கல்விப் பிரிவுகளில் அவ்வாறு செய்வதற்கு அவர் ஒத்துழைக்காததால் அவர் மாற்றப்படுகிறார் என்பதே பரவலாக ஊடகங்களிலும் மக்களிடமும் இருக்கும் கருத்து.

அது தவறென்று நிரூபிக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மீண்டும் திரு. உதயசந்திரனையே முழுமையான கல்விச் செயலராக அறிவித்து ஆணை பிறப்பிப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் அதைச் செய்ய முடியும்.

என்னைப் போன்ற பல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், களப் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக கல்வித் துறை மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நேரடியான ஒத்துழைப்பை அளித்து வந்திருக்கிறோம். முழுமையான மாற்றம் வரும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். திரு.உதயசந்திரனை அந்த முழுமையான பொறுப்பிலிருந்து நீங்கள் நீக்கியிருப்பது இனி எந்த அடிப்படையில் உங்கள் அரசின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது என்ற கேள்வியை எழுப்புகிறது.

தமிழகக் குழந்தைகள், மாணவர்கள் மீது மெய்யான அக்கறையுடன் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், திரு. உதயசந்திரனை மறுபடியும் முழுமையான கல்விச் செயலராக அறிவியுங்கள். இல்லையேல் உங்கள் அசல் நோக்கங்கள் வேறு என்று மக்கள் புரிந்துகொள்வார்கள்.

அன்புடன்

ஞாநி
25 ஆகஸ்ட் 2017

Gnani Sankaran

Leave A Reply

%d bloggers like this: