பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா… விவசாயிகளுக்கு விடிவு ஏற்படுத்தும் திட்டம் என்று பிரதமர் மோடி தனக்குத்தானே புகழ்ந்துகொண்டு தொடங்கிய பயிர்க்காப்பீட்டுத் திட்டம். இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்று புகழப்படும் இத்திட்டம், காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் (குறிப்பாகத் தனியார்) ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்குமிகப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்ஈ) என்ற அமைப்பு வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கை கூறியுள்ளது.

மத்திய அரசின் புள்ளி விபரங்களின்படியே, 2013இல் 11,772 ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை,2014இல் 12,360,2015இல்12,602 என்று ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது என்ற நிலையில் இவ்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயி களின் உற்பத்திச் செலவுடன் 50 சதவீதலாபம் சேர்த்து குறைந்த பட்ச ஆதரவுவிலை நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடி, விவசாயி களுக்குப் பாதுகாப்பளிக்கும் வேலை யைக் காப்பீட்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டார் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், இது அப்படியும் அல்லாமல், தனியார்க்காப்பீட்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே செய்யப் பட்டதோ என்று சந்தேகிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் முன்பிருந்த தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்திற்கு மாற்றாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் பட்டியலில் பொதுத்துறை நிறுவனங்களே இல்லை. மிகக்கடுமை யான முயற்சிகளுக்குப் பின்னரே, பொதுத்துறை நிறுவனங்களை அரசு பட்டியலில் சேர்த்தது என்பதிலிருந்து இவ்வாறு சந்தேகிக்க வேண்டியுள்ளது. முதன்முறையாகக் கடந்த நிதியாண்டில் தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த வணிகம் பொதுத்துறை நிறுவனங்களின் வணிகத்தைவிடக் கூடுதலாகியுள்ளது. பயிர்க்காப்பீட்டின் 73 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்குச் சென்றதே இதற்குக் காரணம் என்று வணிக இதழ் களே வெளிப்படையாக எழுதியுள்ளன.

விவசாயி கைக்குச் சென்றது எவ்வளவு?                                                                                  இந்நிலையில், சிஎஸ்ஈ ஆய்வறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, மத்தியவேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங் சில தகவல்களைத் தெரிவித் திருக்கிறார். 2016 ஜூன் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம்கோடி அளவுக்கு காப்பீட்டு நிறுவனங் களுக்கு லாபம் என்று கூறியுள்ள சிஎஸ்ஈ அறிக்கை, ரூ.15,891 கோடி பிரிமியமாக வசூலானதாகவும், ரூ.6 ஆயிரம்கோடி அளவுக்கு மட்டுமே விவசாயிகளால் இழப்பீடு கோரப்பட்டு, அதிலும் ஏப்ரல் 2017 வரை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ.22,344 கோடி பிரிமியம் வசூலிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து ரூ.15,100 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அமைச்சர் ராதா மோகன், ரூ.9,446 கோடி இழப்பீடு ஏற்கப்பட்டு, அதில் ரூ.6,624 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான லாபம் கிடைத்துள்ளது என்ற சிஎஸ்ஈ அறிக்கையிலிருந்து அமைச்சரின் பேச்சு மாறுபட்டுள்ளதாகத் தெரியவில்லை.

இழப்பீடு தாமதமாவதன் சூட்சுமம் என்ன?                                                                                               இழப்பீடு வழங்குவதில் உள்ள தாமதங்கள் களையப்படும் என்பதே அமைச்சர் கொடுத்த ஒரே உறுதி மொழியாகும். ஆனால், தாமதத்திற்கு முக்கிய மான காரணமே, பல தனியார்க்காப்பீட்டு நிறுவனங்களிடம் போதுமான கட்ட மைப்பு வசதிகள் இல்லை என்பதுதான். பல தாலுகாக்களில் தனியார் நிறுவனங்களுக்கு அலுவலகமே இல்லாத நிலையில் இழப்பீட்டை எங்கு கேட்பது என்பதே தெரியாத நிலையெல்லாம் நிலவுகிறது. உதாரணமாக, பயிர்க் காப்பீடு செய்கிற ஒரு குறிப்பிட்ட தனியார்க்காப்பீட்டு நிறுவனத்துக்கு ஹரியானா மாநிலம் முழுவதற்குமே 5-6 ஊழியர்கள் தான் இருக்கிறார்கள் என்பதை சிஎஸ்ஈசுட்டிக்காட்டியுள்ளது. இவற்றிலிருந்து, வழங்கப்பட்ட இழப்பீடுகள்கூட, பெரும்பகுதி பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியவையாகத்தான் இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

அரசே அதிக நிதி ஒதுக்குவதன் மர்மம் என்ன?                                                                                           மேலும் பயிர்க்காப்பீட்டுக்கான பிரி மியத்தில் பெரும்பகுதி மத்திய, மாநில அரசுகளால்தான் செலுத்தப்படுகிறது. மோடி யின் புதிய திட்டத்திற்கான பிரிமியம் முந்தைய திட்டத்தைவிட மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சிஎஸ்ஈ அறிக்கை புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் மாநில அரசுகளும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் ராதா மோகன், பிரிமியம் அதிகமாக இருப்பதாக மாநில அரசுகள் கருதினால், அவை தாங்களே காப்பீட்டு நிறுவனங்களைத் துவங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

2016-17 பட்ஜெட்டில் பயிர்க்காப்பீட்டுப் பிரிமியத்தில் மத்திய அரசின் பங்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூ.5,500 கோடி நிதி, ஆண்டின் இறுதியில், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.13,240 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நூறுநாள் வேலைத்திட்டம் முதலான முக்கியமான திட்டங்களின் நிதியை வெட்டிச்சுருக்கும் மத்திய அரசு, இதற்கு மட்டும் தாராளமாக தானாகவே ஒதுக்கீடு செய்வதிலிருந்து இதில் ஏதோ பெரிய ஊழல் இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

யாருக்கு ஆதாயம்?                                                                                                                                     காப்பளிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 38 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் பிரிமிய வருவாய் 400 சதவீதம்வளர்ந்துள்ளதாக அகில இந்தியவிவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய தலைமைக் கணக்காயரும் (சிஏஜி) 2011-12லிருந்து 2015-16வரை ரூ.32,606 கோடி பயிர்க்காப்பீட்டுப் பிரிமியத்துக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் பெற்ற பலன் குறித்துத் தெளிவான தகவல்கள் அரசிடம் இல்லாமல் இருப்பது சங்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பளிச்சென்று சொன்னால், பயிர்க்காப்பீடு என்ற பெயரிலும் தனியார் நிறுவனங்களுக்கு உதவும் ஊழல் சத்தமில்லாமல் அரங்கேறியிருக்கிறது.

முதன்முறையாகக் கடந்த நிதியாண்டில் தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த வணிகம் பொதுத்துறை நிறுவனங்களின் வணிகத்தைவிடக் கூடுதலாகியுள்ளது.

பயிர்க்காப்பீட்டின் 73 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்குச் சென்றதே இதற்குக் காரணம் என்று வணிக இதழ் களே வெளிப்படையாக எழுதியுள்ளன.

செய்தித் தொகுப்பு: அறிவுக்கடல்

Leave A Reply