ஒரு படைப்பாளன் ஆய்வாளனாகவும் ஒரு ஆய்வாளன் படைப்பாளனாவும் இருக்க இயலாதென்று கைலாசபதி எழுதியதாக நினைவு….. ஆனால், அதனை சு.வெங்கடேசன் முறியடித்துவிட்டார் என்றே சொல்லத்தோன்றுகிறது…….

திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா 2017 என்று NBT மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சியில் இன்றைய சிறப்பு விருந்தினராக காவல் கோட்டம் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசியது மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க ஆய்வுரையாக இருந்தது…..

1950-60 களில் அறிஞர் அண்ணா பலமேடைகளில் சொன்ன ஒரு கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது…. சேலம் போனால் மாம்பழம் வாங்கிவிடுகிறோம், மணப்பாறை போனால் முறுக்கு வாங்கிவிடுகிறோம், கோவில்பட்டிக்குப் போனால் கடளைமிட்டாய் வாங்கிவிடுகிறோம். ஆனால், எங்கு போனாலும் புத்தகம் மட்டும் வாங்குவதே இல்லை என்று சு.வெங்கடேன் குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார்…..

புத்தகம் வாசிப்பதென்பதும், கலைஇலக்கியத்தைப் படிப்பதென்பதும், நாம் எவ்வாறு இயங்க வேண்டும் என்று மனித மனத்திற்கு அவை கட்டளையை பிறப்பிக்கிறது. எனது கை, கைகளிலுள்ள எலும்புகள், நரம்புகள், ரத்த ஓட்டம் , திசுக்கள், அணுக்கள் இவையாவற்றிலும் வாசிப்பும் கலைஇலக்கியமும் ஊடாடுகிறது. அதன்வழி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. இயற்கை எல்லாவற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்திவிடுகிறது. ஆனால், மனித மனத்தையும், அறிவையும், அனுபவத்தையும் மட்டும் அதனால் கடத்த முடியாது. அதனைக் கடத்தக்கூடிய நுட்பத்தை மனிதன்மட்டுமே கண்டுகொண்டான். ஆகையால்தான் கலைஇலக்கியத்தை கையில் எடுத்துக்கொண்டான்…….

இதற்கு பல உதாரணம் சொல்லமுடியும். குரங்கினத்திற்கு நடக்கவோ, தாவவோ யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை. இயற்கை எல்லா ஜிவராசிகளுக்கும் கற்றுகொடுக்காமலே கற்றுக்கொள்ளும் சூழலை வழங்கியிருக்கு. மனிதன் மட்டுமே நாளும் கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்…..

கல்வெட்டுகள் அதிகம் கண்டெடுத்த நாடு இந்தியாதான். அதில் 68% கல்வெட்டு தமிழகத்தில் கிடைத்தது. இதைவைத்தே தமிழ் சமுகத்தின் பெருமையை மதிப்பிடலாம். இதன்வழி தமிழர்களின் வரலாறு நீண்டது என உணரலாம். ஐரோப்பிய கிரக்க தாலமி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிந்துந்தி, கங்கை நதி ஆகிய இடங்களில் ஒரே மாதியான அசோகனின் கல்வெட்டை பார்த்து ‘கிரேக்க வரலாறோடு ஒப்பிடத்தக்கது அசோகனின் கல்வெட்டு’ என முடிவுக்கு வருகிறார்…..

ஆனால், அதனைவிடவும் பழமையான கல்வெட்டு நம்மிடம் உள்ளது என்பதுதான் மிக முக்கியமான சான்றாகும். காடுவெட்டி சோழனால் கட்டப்பட்டதுதான் தஞ்சை பெரிய கோயில் என்று பல ஆண்டுகள் நம்பி வந்தோம். பிற்காலத்தில் பணிக்கு சென்ற ஒரு கலெக்டர்தான் ராஜராஜனால் கட்டப்பட்டது என்று கண்டாராய்ந்து சொன்னார். அதுபோல கீரல் என்று எழுதத் தொடங்கும் வழக்கம் அன்று இருந்தது. அப்படி கீரல் என்று எழுத கற்று இருந்தவர் ‘கரும்பண குடும்பன் என்ற ஒருவர் தலித்தாக இருந்தார்’ என்பதுதான் வியப்பாய் உள்ளது. அதுவும் கருவரைக்குள்ளே எழுதும் வழக்கம் இருந்துள்ளது. கீரல் முத்துசாமி என்று எழுத அன்றைய உயர்சாதிக்கு தெரியவில்லை என்ற உண்மையின் வழி தலித்கள் படித்தவர்களாக இருந்துள்ளனர் என்ற உண்மையும் அறியலாம்…..

‘எழுத்து சமுகத்தின் தாயகமாக தமிழகம்’ இருந்துள்ளது என்பதை இதன்மூலம் அறியலாம். உலகத்திலேயே பானையில் எழுதியவன் தமிழன்தான். அதுவும் பிராமி எழுத்துவடிவில் கிடைக்கிறது. பானை செய்தவன் குயவன் எனில் அன்று அவர்கள் படித்தவர்களாக இருந்தார்கள் என்ற உண்மையும் அறியலாம். சங்க இலக்கியத்தில் பானையை ஆண்மகன் கள் குடிக்கத்தான் பயன்படுத்தினான். ஆனால் பெண்மகளோ தன்வாழ்நாள் முழுவதும். பானையோடு வாழ்ந்தாள். அப்படியெனில் பெண்கள் கல்வியில் முக்கியமானவராக இருந்தார்கள் என்பதையும் அறியலாம்……

கல்விக்கடவுள் சரஸ்வதி என்கிறார்கள். அந்த சரஸ்வதி, கல்விப்பற்றி எங்காவது சொல்லியுள்ளாரா? என்று மகாத்மா ஜோதிராவ் பூலே கேள்வி எழுப்புகிறார். விடைகிடையாது. சமஸ்கிருத காவியங்களில் பெண்கள் பேசியது கிடையாது. ஆனால் சங்க இலக்கியங்களில் 46 பெண்பாற் புலவர்கள் கவிபாடியுள்ளனர். அதை தொகுத்தவனெல்லாம் ஆண்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்….

அசோகனின் கல்வெட்டுக்கு 200 , 300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் புள்ளிமான் கொம்பு என்ற ஊரில் ‘அந்துவன்’ என்பவன், சண்டையிட்டு மாண்டுபோனதை எழுதியுள்ளான். 2014 ல் வைகை நதியை ஆய்வு செய்த அமர்நாத், தேனூர் என்ற இடத்தில் மழையால் சாய்ந்த ஆலமரத்தின் அடியில் கண்டெடுத்த ஏழு தங்க கட்டிகளை ஆராய்ததில் ‘கோதை’ என்று ஒரு பெண் பெயரை பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். சிந்துசமவெளி நாகரீகத்தில் தங்கமே கிடையாது என்பதை நாம் அறிவோம்.

கீழடியில் வெறும் 50 சென்ட இடத்தில் ஆய்வு செய்ததில் 3 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டதில் மட்டுமே 72 பானையோடுகள். அத்தனையிலும் எழுத்துக்கள் உள்ளன. இதை ஆய்ந்த அமெரிக்க கரிமவேதியல் துறை மிகப்பழமையான எழுத்துதான் என்கிறது. ஆய்வு செய்யப்பட வேண்டிய ஆழமோ ஆறுமீட்டராகும் அதில் கிடைக்கும்பொருள் இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லலாம்…..

சமஸ்கிருத கல்வெட்டு கி.பி 3 ல்தான் ராஜஸ்தானில் கிடைத்தது.இந்தி கல்வெட்டும் வட இந்தியாவில் அல்ல நம்ம மகாபலிபுரத்தில்தான் கிடைத்தது. கடவுள், மதம் தோன்றுவதற்கு முன்பே இங்கே கல்வியும் எழுத்தும் இங்கே தோன்றியுள்ளது. எழுத்தும், கல்வியும், வாசிப்பு தமிழ் சமுகத்தின் ஆணிவேர்…..

கிரேக்க காலண்டர் ஆண்டுக்கு பன்னிரெண்டு மாதம் என்பதை நம் சங்க இலக்கியம் எப்போதே சொல்லிவிட்டது. அத்தகைய மேன்மையான மரபை நமது முன்னோர்கள் நம்மிடம் கொடுத்து சென்றுள்ளனர். அதனை எழுத்தின்வழியும் கலைஇலக்கியத்தின்வழியும் நாம் திரும்ப திரும்ப உலகத்திற்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்…..

இறுதியாக…. காக்கா கரைந்தால் விருந்துவரும் என்பதை புத்தர் உபதேசத்தின் வழி கப்பலில் விருந்தினர் வருவார்கள் என்பதை காக்கா கரைந்து ஊருக்கு சொன்னதை நயமாக சொல்லி “தான் ஒரு படைப்பாளன் மட்டுமல்ல- ஒரு ஆய்வாளன் என்பதையும் நிறுபித்தார் தோழர் சு.வெங்கடேசன்”.

  • வெற்றி சங்கமித்ரா

Leave A Reply

%d bloggers like this: