புதுதில்லி;
ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ திருடி இருப்பதாக விக்கிலீஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த ஆதார் எண் கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தெரிவித்தது. பின்னர் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது.

இதற்கு எதிர்ப்பு எழுந்தபோது, ஆதாருக்காக வழங்கப்படும் தகவல் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், 40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்கள் திருடியதாக மென்பொருள் வல்லுநர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ திருடி உள்ளதாக விக்கிலீஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கிராஸ் மேட்ச் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் எக்ஸ்பிரஸ் லேன் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், “இது விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் அல்ல; ஒரு இணையதளம் வெளியிட்டது; அந்த தகவல்களில் உண்மை இல்லை; ஆதார் தகவல்கள் பாதுகாப்பாகவே உள்ளன; மற்ற அமைப்புகளால் பயன்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.

Leave A Reply