====பேராசிரியர் கே. ராஜு====
பஞ்சாபியர்களின் உற்சாகத்தைப் பிரதிபலித்த அறிவியலாளர்-கல்வியாளர் பேராசிரியர் யஷ்பால் 1926ஆம் ஆண்டு பிறந்தவர். இயற்பியலாளராகப் பயிற்சி பெற்ற யஷ்பால் உலக அளவில் காஸ்மிக் அலைகளுக்கான துகள் இயற்பியல் துறையில் உலகப் புகழ்பெற்ற வல்லுநராக பரிணமித்தார்.

அடிப்படை ஆய்வுகளுக்கான டாடா இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த அவரை இஸ்ரோ தலைவர் டாக்டர் சதீஷ் தவான் அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் (space application centre-SAC) தலைவராகக் கொணர்ந்தார்.

1972இல் இந்திய விண்வெளி ஆய்வை கல்விக்குப் பயன்படுத்தும் பரிசோதனையை (SATELLITE INSTRUCTIONAL TELEVISION EXPERIMENT-SITE) மேற்கொள்ளும் பொறுப்பை யஷ்பால் ஏற்றுக் கொண்டார். காஸ்மிக் கதிர்கள் தொடர்பாக ஆழமான ஆய்வுகளைச் செய்திருந்த யஷ்பால், ஒரு விஞ்ஞானியாக மட்டுமே இருந்துவிடாமல் தான் பெற்ற அறிவியல் அறிவை குழந்தைகளிடமும் சாமானியர்களிடமும் கொண்டு செல்வதில் முனைப்புக் கொண்டவராக இருந்தார். ஆர்வமுள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து கல்வி, வேளாண்மை, உடல்நலன், சுகாதாரம் போன்ற துறைகளில் அவர்கள் செயல்படுவதற்கான திட்டங்களை உருவாக்கினார்.

கிராமந்தோறும் தொலைக்காட்சி என்ற இலக்கை நோக்கி செயற்கைக்கோள் பயன்பாட்டு மையங்களை ஏற்படுத்தினார். அத்திட்டத்தின் கீழ் ஏ.டி.எஸ்.-6 எனும் செயற்கைக் கோள்கள் வழியே இந்தியாவின் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள 2400 தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு தகவல்கள் கொண்டு செல்லப்பட்டன. பார்வையாளர்கள் இந்த ஒளிபரப்புகளைக் கண்டு பலனடைந்தனர்.

தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் கல்வி தரும் பரிசோதனை புதுமையாகவும் வெற்றிகரமாகவும் அமைந்தது. “புதிய பரிசோதனைகளை இளைஞர்களே செய்து பார்த்து அனுபவம் பெற ஊக்குவித்ததால்தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது. அதைத் தடுக்கும் சமூகம் அவர்களிடமிருந்து பெரும் மகிழ்ச்சியைத் தட்டிப் பறிக்கிறது. இறுதியில் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கும் சமூகத்தை உருவாக்குவதில் போய் இது முடிகிறது” என்றார் பேராசிரியர் யஷ்பால்.

அரசு அவருக்கு அளித்த பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர், அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் போன்ற பொறுப்புகளை ஏற்று அவர் திறம்படச் செயல்பட்டார். அவர் மேற்கொண்ட பல்வேறு புதிய முயற்சிகளில் அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்த்தல். அவர்களிடம் அறிவியல் பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்துதல் என்ற பணி மிக முக்கியமானது. தூர்தர்ஷன் சேனல் வழியாக நாடுதழுவிய வகுப்பறைகள் என்ற தலைப்பில் கற்றல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார். இன்றளவும் அந்த நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.
“திருப்பு முனை (TURNING POINT)” என்ற தலைப்பில் தொலைக்காட்சியில் அவரே தோன்றி பள்ளிக்குழந்தைகள் எழுப்பும் அறிவியல் கேள்விகளுக்கு விடைகளையும் எளிமையான விளக்கங்களையும் அளித்த நிகழ்ச்சி லட்சக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை வென்றது. பல குழந்தைகளுக்கு அவர் பிரியமான “யஷ்பால் அங்கிள்” ஆனார்.

“குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் கல்வியை விட்டொழியுங்கள்” என்று அவர் அறைகூவல் விடுத்தார். 1993ஆம் ஆண்டு அவர் தலைமையிலான குழு, சுமையின்றிக் கற்றல் (LEARNING WITHOUT BURDEN) என்ற அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. தனியாரிடம் கல்வி என்ற கோட்பாட்டை அவர் கடுமையாக எதிர்த்தார். தாய்மொழியில் மருத்துவ, பொறியியல் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது அவர் தலைமையில் அமைந்த உயர்கல்வி குறித்த கல்விக்குழுவின் பரிந்துரை. 1995ஆம் ஆண்டில் ஸ்பூனில் வைத்துக் கொடுத்தால் பிள்ளையார் பாலைக் குடிப்பதாக ஒரு புரளி வேகமாகப் பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் கையில் பால் சொம்புடன் பிள்ளையார் கோவில்களை நோக்கிப் படையெடுத்தனர். ஒரு செய்முறை விளக்கத்தின் மூலம் பாலின் மேற்பரப்பு இழுவிசை (SURFACE TENSION)

காரணமாகவே இந்த அதிசயம் நிகழ்வதாக அறிவியல் விளக்கம் தந்து மக்களின் மயக்கத்தைத் தெளிய வைத்தார் யஷ்பால். சென்னையில் பிள்ளையார் சிலைக்குப் பக்கத்தில் காந்தி சிலையை வைத்து, பிள்ளையார் சிலை மாதிரி காந்தி சிலையும் பால் குடிக்கும் என்ற செய்முறை விளக்கத்தை பத்திரிகையாளர்கள் முன் செய்து காட்டிய விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் என் நினைவுக்கு வருகிறார்.

`கப்ளிங்’ என்ற வார்த்தை யஷ்பாலுக்கு மிகவும் பிடித்த வார்த்தை என்கிறார் என்சிஈஆர்டி முன்னாள் இயக்குநர் கிருஷ்ணகுமார். ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி உரையாடலுக்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்த வேண்டும் என்பதை அந்த வார்த்தைக்கான பொருளாகக் கூறுகிறார் யஷ்பால்.

யு.ஆர்.ராவ் இந்த அண்டம் குறித்து தெரிந்து கொள்ள நம்மை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல உதவினார் எனில், யஷ்பால் நமக்குக் கற்பிக்க விண்வெளியைப் பயன்படுத்தினார். பிற விஞ்ஞானிகளுடன் இணைந்து விண்வெளி, செயற்கைக் கோள், தொலைக்காட்சி ஆகிய முக்கியமான துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இந்திய நிறுவனங்களை அவர்கள் கட்டமைத்தார்கள். அவர்கள் இருவரும் மறைந்துவிட்டாலும் “நம்மால் முடியும்”, “எதையும் முடியாது எனச் சொல்லாதே” என்ற இரு தாரக மந்திரங்கள் நமக்கு என்றென்றும் துணை நிற்கும்.

(உதவிய கட்டுரை : ஆங்கில, தமிழ் இந்து நாளிதழ்களில் விஞ்ஞானி டி.பாலசுப்பிரமணியன், அறிவியல் எழுத்தாளர் ஆயிஷா. இரா.நடராசன் எழுதிய கட்டுரைகள்)

Leave a Reply

You must be logged in to post a comment.