வேலூர் மாவட்டம் , ஜோலார்பேட்டை கே.கே.தங்கவேல் நகர் சின்ன கோடியூரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வேலூர் சிறையிலிருந்து சென்ற பேரறிவாளனுக்கு உருக்கமிகு வரவேற்பளிக்கப்பட்டது. அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. இவர்களில் நளினி ஒரு பெண் குழந்தைக்குத் தாய் என்பதால் கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதியாக அவர்  மாற்றப்பட்டார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மரண தண்ட னையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது. இவர்கள் அனைவரும் 25 ஆண்டு காலம் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்கள். எனவே தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைவரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மத்திய அரசின் சி.பி.ஐ.விசாரித்த வழக்கு என்பதால் தமிழக அரசு ஒருதலைபட்சமாக முடிவு எடுக்க முடியாது என கூறப்பட்டது. இதையடுத்து இவர்களின் விடுதலையை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது.
பேரறிவாளனின் தந்தை காளிதாசன்(70)வயது முதுமை காரண மாக உடல் தளர்ந்து நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகவே உள்ளார். பேரறிவாளன் கைது  செய்யப்பட்ட நாளிலிருந்தே உடல் நலம் குன்றி விட்டார்.இதனால், அவரது தந்தையை பார்ப்பதற்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் வேலூர் சிறை அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்தார். ஆனால் இம்மனுவை சிறைத் துறை டி.ஐ.ஜி. நிராகரித்து விட்டார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாளும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்தார்கள் . இதை ஏற்று பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து பரிசிலிக்கப்படும் என கடந்த ஜூலை மாதம் 8 ந் தேதி தமிழக முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வியாழக்கிழமை(ஆக.24) வேலூர் சரக சிறைத் துறை டி.ஐ.ஜி.க்கு ஒரு அரசு ஆணை அனுப்பினார். அதில் பேரறிவாளனுக்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரோல் வழங்கலாம் என தெரிவித் துள்ளார்.

இந்த உத்தரவு கிடைத்தவுடன் பேரறிவாளனை பரோலில் விடுவிக்கும் நடவடிக்கையில் சிறைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். தனி வாகனத்தில் அவரது சொந்த ஊருக்கு காவல்துறையினர் பேரறிவாளனை அழைத்துச் சென்றார்கள். அவருடன் சிறைக் காவலர் ஒருவரும் நான்கு காவலர்களும் சென்றார்கள். இரவு சுமார் 8.55 மணிக்கு சிறை வளாகத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு பேரறிவாளனின் வீட்டை அடைந்தது.
அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. சிலர் குடைகளைப் பிடித்தபடியும் பலர் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்த படியும் பேரறிவாளனை வரவேற்றார்கள்.

Leave A Reply