புதுதில்லி;
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் செப்டம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கெனவே நீதிபதி ஓ.பி. ஷைனி கூறியிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால், மத்திய அரசுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைக்குழு (சிஏஜி) அறிக்கை குற்றம்சாட்டியது. நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இவ்விவகாரம் தொடர்பாக, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 6 ஆண்டுகாலமாக இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையல், கடந்த ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கடைசியாக ஜூலை மாதம் நடந்த விசாரணையின்போது, ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. ஷைனி கூறியிருந்தார்.

அதன்படி  இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கில் தீர்ப்பு தயாராகவில்லை என்று கூறி தீர்ப்புத் தேதியை செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஓ.பி. ஷைனி ஒத்திவைத்தார்.

Leave A Reply