மத்திய அரசிடம் தமிழக நலன்களை அடமானம் வைத்துள்ள மாநில அரசை ராஜினா கோரி மக்கள் கடிதம் அனுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஆக.18-23 தேதிகளில் பிரச்சாரம் செய்தது. இதன் நிறைவாக பல்லாவரம் பகுதி, அனகாபுத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேசியது வருமாறு:
மத்திய அரசு ராணுவ தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாடுகளில் இருந்து தளவாடகளை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் ஆயுத, வெளியுறவுக் கொள்கை நாட்டிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் அதிகம் உள்ளதால் அந்நாட்டில் உள்ள தீவிரவாதத்தை இந்தியா ஒழிக்க போர் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்திக்கிறது. இந்தியப்படைகள் விரைவில் ஆப்கான் செல்ல உள்ளன. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனை தடுக்காத மத்திய அரசு, மக்கள் மாட்டுக்கறி உண்ண தடைவிதிக்கிறது. முற்போக்கு கருத்துடையவர்களை தண்டிக்கிறது. இந்த ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல.

500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்த  பிறகு உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். மும்பையிலும் இதேநிலை காணப்படுகிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் வேலை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கெதிராக எதிராக திமுக, அதிமுக குரல் கொடுக்க வேண்டும்.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி மாநில சட்டமன்றம் 2 மசோதாக்களை அனுப்புகிறது. அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழகத்தை மத்திய அரசு அவமதித்தது. இதற்கெதிராக கோவப்பட வேண்டிய அரசு அமைதியாக உள்ளது.  தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கக்கூடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரை அழைத்து பேச நிலையான அரசு இல்லை. இத்தகைய சூழலில் மக்கள் நலன் காக்கும் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்துகிறது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தெருவோரக் கடைகளில் உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி, வர்த்தகம், சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் பின்பற்றப்படும் கொள்கை நாட்டு மக்களை பின்னோக்கி தள்ளுகிறது. இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டங்களில் அனைத்து தரப்பினரும் கைகோர்க்க வேண்டும். அனாபுத்தூர் பகுதியில் மீண்டும் விமான நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டால் அதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சி முன்நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் ஹேமக்குமார் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜீவா, பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்ராகவலு, மோகன் உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: