‘முத்தலாக்’ என்று மூன்றுமுறை கூறி உடனடியாக விவாகரத்து செய்வது என்பது சட்டவிரோதமானது என்றும், முஸ்லீம் பெண்களின் உரிமைகளை மீறிய ஒன்று என்றும்  ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. மூன்று பேர்களில் இரண்டு பேர்  ஆதரவுடன் அளிக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பானது ‘முத்தலாக்’ என்ற பெயரில் அடாவடித்தனமாக விவாகரத்து செய்யப்பட்டு வந்த  முஸ்லீம் பெண்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

மூன்று நீதிபதிகளில் இருவர், உடனடியாக விவாகரத்து செய்வது என்பது அரசமைப்புச்சட்டத்தின் 14ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்று கூறியுள்ள அதே சமயத்தில், ஒருவர் இது சட்டவிரோதமானதும் என்றும் ஏனெனில் இது குரான் மற்றும் இஸ்லாமிய மத நடைமுறைகளிலும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.  இந்தத் தீர்ப்பின்மூலம் முஸ்லீம் சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமைகளுக்கான போராட்டமும் மற்றும் அனைத்துப் பெண்களுக்கான போராட்டமும் ஓரடி முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

இதில்,  சிறுபான்மை தீர்ப்பு வழங்கியுள்ள இரு நீதிபதிகள், பர்சனல் சட்டம் (personal law) என்கிற முஸ்லீம்களுக்கான சட்டம் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள சட்டம் என்றும், எனவே அதில் உள்ளவர்களை சமத்துவம் என்கிற ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியிருப்பது, பிற்போக்குத்தனமானதும், மதச்சார்பற்ற மாண்புக்கு எதிரானதுமாகும்.

“முத்தலாக்”கிற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்களைப் பயன்படுத்திக் கொண்டு, பாஜகவானது தன்னுடைய ஒரேசீரான சிவில் சட்டத்தை (uniform civil code)த் திணிக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்திட  முயற்சிக்கும்.  எனவே இவ்வாறு நீதிபதிகளின் சிறுபான்மை தீர்ப்பு ஒட்டுமொத்த பெரும்பான்மை தீர்ப்பினையே வேண்டுமென்றே தவறானவிதத்தில் வியாக்கியானம் செய்வதற்கு இட்டுச்செல்லும்.  பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு இதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. அதாவது தாங்கள் அளித்துள்ள தீர்ப்பானது “முத்தலக்” என்று உடனடியாக விவாக ரத்து செய்வது  தொடர்பானது மட்டுமே என்றும், முஸ்லீம் பர்சனல் சட்டத்தில் உள்ள இதர ‘தலாக்’ வடிவங்கள் குறித்து  அல்ல என்றும் மிகவும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.  முஸ்லீம் பர்சனல் சட்டத்தின்கீழ் விவாகரத்துக்கான அனைத்து அம்சங்களுக்கும் இதுபோன்று நீதிமன்றத்தின் விரிவான தலையீடு தேவைஎன்கிற அரசு வழக்குரைஞரின் ( அட்டார்னி ஜெனரலின்) வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

தேவை என்னவெனில், அனைத்து மதத்தைச் சேர்ந்த  பெண்களுக்கும் சம உரிமைகள் வழங்குவதற்கான வேலைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும், அந்தத் திசைவழியில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுமேயாகும். ஒரேசீரான தன்மை என்பதே சமத்துவம் அல்ல. (Uniformity is not equality) ஒரே சீரான சிவில் சட்டம் (uniform civil code) என்பது நீதி வழங்குவதற்கான உத்தரவாதம் என்றும் கூறமுடியாது. கவுரவக்கொலை என்ற பெயரில் நடைபெறும் கொலைகளைத் தடுப்பதற்கு எதிராக, உரிய சட்டத்தை உருவாக்க பாஜக தயாரில்லை.  மாறாக, தற்போது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவின்கீழ் பெண்களுக்கு இருக்கின்ற பாதுகாப்புகளைக்கூட நீர்த்துப்போகச் செய்வதற்கான இழிசெயல்களில் அது இறங்கி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மத அடிப்படையில் இருக்கின்ற பர்சனல் சட்டங்களுக்குள்ளும் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான போராட்டங்களைப் பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வதற்கான உறுதியை வலுப்படுத்திடும். இது முஸ்லீம் பெண்களுக்கு மட்டுமல்ல, இந்து மற்றும் இதர மதஞ்சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் பொருந்திடும்.

(ஆகஸ்ட் 23, 2017)

(தமிழில்: ச.வீரமணி)

Leave A Reply

%d bloggers like this: