எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பான ‘ஒன் பார்ட் வுமன்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோவை கொங்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ என்ற நாவல் குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றிய இழிவான கருத்துகளுடன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நூல் அனிருத்தன் வாசுதேவன் என்பவரால் ‘ஒன் பார்ட் வுமன்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆங்கில நாவலுக்கு சாகித்ய அகாடமியின் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த மொழி பெயர்ப்பு நாவலுக்கான விருது ஆகஸ்ட் 26-ம் தேதி வழங்கப்பட உள்ளது. அப்படி ஓர் உயரிய விருது வழங்கினால் அது, குறிப்பிட்ட சமூக மக்களின் உணர்வுகளையும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழாவையும் கொச்சைப்படுத்துவதாக அமையும். எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பாக வழக்குரைஞர் சிலம்பண்ணன் முறையிட்டார். இதையடுத்து இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு வியாழனன்று (ஆக. 24) இரவு விசாரித்தது.

அதைத் தொடர்ந்து ‘ஒன் பார்ட் வுமன்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர். அடுத்தகட்ட விசாரணையின்போது தமிழில் வெளியான ‘மாதொருபாகன்’ நூலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply