போபால்;
போபாலில் உள்ள இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாட்டுத் தொழுவம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில், பாஜக ஆட்சியில் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். பல ஆயிரம் கோடி ரூபாய் தொடர்புடை, மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான ‘வியாபம்’ ஊழலிலும் சம்பந்தப்பட்டவர். மாட்டிறைச்சி உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் உத்தரவை தீவிரமாக செயல்படுத்தி வருபவர்.

இந்நிலையில்தான், போபாலில் உள்ள இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பல்கலைக் கழகத்தில் மாட்டுத் தொழுவம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சிவராஜ் சிங் சவுகான் அதிர்ச்சியை அளித்துள்ளார்.

தற்போது இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகி லஜ்பத் அகுஜா பதிலளித்துள்ளார். அதில், பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டடங்கள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்குவதற்காகவே கட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மாட்டுத் தொழுவம் அமைப்பதற்காக முடிவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுடன் ஆலோசித்து எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ள அவர், மாட்டுத் தொழுவத்தை பல்கலை வளாகத்தில் அமைத்தால், விடுதிக்குத் தேவையான பால் கிடைக்கும்; மாட்டுச் சாணத்திலிருந்து பயோ கேஸ் உற்பத்தி செய்துகொள்ளலாம்; அதுமட்டுமில்லாமல் இங்கிருக்கும் நிலத்தில் சாணத்தை உரமாக்கி காய்கறி செடி வளர்க்கலாம் என்றும் சமாளித்துள்ளார்.

ஆனால், இதற்கு மணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்கலைக் கழக நூலகத்தில் போதிய புத்தகங்கள் இல்லை; மாணவர்கள் இதழியலைக் கற்கும் வகையில் நல்ல கேமிராக்கள் இல்லை; இதில் கவனம் செலுத்துவதற்குப் பதில், சம்பந்தமில்லாமல் மாட்டுத் தொழுவம் அமைக்கப் போகிறோம் என்பது அநியாயமானது என்று அவர்கள் கொந்தளித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: