பாஜக ஆதரவு சாமியார்  கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா மாநில சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் கொந்தளித்த அவரது ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கடும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை 11 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில், பஞ்சகுலா நகரத்தில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவரான கும்ரீத் ரஹிம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப் பதிவுசெய்ய ஹரியானா உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. 50 வயதுடைய கும்ரீத் தன்னுடையப் பக்தர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. இந்த வழக்கில் இன்று ரஹிம்சிங் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.  மேலும், சாமியார் ராம் ரஹிம்க்கான தண்டனை விவரங்கள் குறித்து வருகிற 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதனால், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பஞ்சாப்பில் ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப், அரியானாவில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறையில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

வன்முறையாளர்கள் காவல்துறை, ஊடக வாகனங்களைத் தீவைத்து எரித்தனர். போலீஸ் நிலையம் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர், செய்தியாளர்கள் மீது கற்கள் வீசி வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக பதற்றமான நிலை உருவாகியுள்ள நிலையில் இரண்டு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சண்டிகர் நகரில், அதிவிரைவு அதிரடிப்படை (RAF)  மத்திய ரிசர்வ் போலீஸ் (CRPF) இந்தோ திபெத்தியன் போலீஸ் (ITBP) மத்திய தொழில்நிறுவன பாதுகாப்புப் படை வீரர்கள் (CISF) 6 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வன்முறை கட்டுக்கடாத நிலையில் ராணுவம் கலவரப்பகுதிக்கு விரைகிறது.

Leave A Reply