டெஹ்ரான்;
மேற்கு ஆசியப்பகுதியில் உள்ள நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு பயங்கரவாதத்தை அமெரிக்கா பரப்பி வருகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் புதிய உத்திகளைக் கடைப்பிடிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். சில புதிய நாடுகளை இதில் இணைக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ள நிலையில், மேற்கு ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளில் பயங்கரவாதத்தை அமெரிக்காதான் பரப்புவதாக ஈரான் கூறியுள்ளது.

இப்பகுதியில் உள்ள நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு அந்நாடுகள் எடுக்கும் முடிவுகளையும் தங்களுக்குச் சாதகமான வகையில் அமெரிக்கா மாற்றிக் கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப் போவதாகவும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதற்கும் ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பக்ரம் கச்சாமி கூறுகையில், “இன்றைக்கு அடுத்த நாடுகள் என்ன செய்கின்றன என்று அமெரிக்கா கண்டிக்கிறதோ, அதைத்தான் பல நாடுகளில், அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தானில், அந்நாடு செய்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தவறான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார்கள்.

அமெரிக்காவின் சந்தர்ப்பவாத உத்திகள் மற்றும் தன்னிச்சையான கொள்கைகள் பதற்றத்தை அதிகரித்ததோடு, இந்தப் பிராந்தியம் முழுவதும் பயங்கரவாதத்தையும, தீவிரவாதத்தையும் பரப்பி விட்டது. அமெரிக்காவின் தவறான தலையீடுகள் பிரச்சனையை அதிகப்படுத்திவிட்டது “என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “மேற்கு ஆசியப்பகுதியில் உள்ள நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்கப் போதிய தயாரிப்புடன்தான் உள்ளன. பிராந்தியப் பாதுகாப்பை அவர்களால் உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும்.

பிற நாடுகளின் விவகாரத்தில் தலையிட்டு, அந்த நாடுகள் எடுக்கும் முடிவுகளில் தங்கள் பங்களிப்பு இருக்குமாறு அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது. இதனால் அண்டை நாடுகளோடு பிரச்சனை ஏற்படுகிறது. போருக்குச் செல்கிறார்கள். அமைதி குலைகிறது. அமெரிக்காவின் ஆலோசனைகள் இப்பகுதி நாடுகளுக்குத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.
பாக்.கிற்கு கண்டனம்

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்குவது ஆபத்தானது என்று பாகிஸ்தானையும் ஈரான் கண்டித்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் அந்நாடு பங்கேற்ற போர்களில் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட தலையீடுதான் இரண்டாவது பெரிய நடவடிக்கை என்று கூறப்படுகிறது. 2001 ஆம் ஆண்டில் தாலிபான்களை வெளியேற்றப் போகிறோம் என்று கூறிக்கொண்டு உள்ளே நுழைந்த அமெரிக்கப் படையில் இதுவரையில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயமடைந்தனர். சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் முடிவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எடுத்திருந்தார். அந்த முடிவை மாற்றும் முயற்சியில் டொனால்டு டிரம்ப் இறங்கியிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.