பாட்னா;
நிதிஷ்குமார் அரசின் 700 கோடி ரூபாய் தொண்டு நிறுவன ஊழலை மூடி மறைக்க, சிபிஐ முயற்சிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி குற்றம் சாட்டியுள்ளார்.

இப்பிரச்சனையை பீகார் சட்டப்பேரவையில் எழுப்பிய ராப்ரி தேவி, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த ஊழல் விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் பகல்பூரில் உள்ள ஸ்ரீஜன் மகிளா விகாஸ் என்ற தொண்டு நிறுவனம், மாநில அரசு நிதியைப் பெற்றதில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 700 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் தொடர்புடைய 6 பேர் இறந்துவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இன்று இந்த பிரச்சனையை ராப்ரி தேவியும், அவரது கட்சி உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் கிளப்பினர். அவர்கள் நிதிஷ்குமார் மீது நேரடியாக ஊழல் புகார்களையும், கொலை குற்றச்சாட்டுகளையும் சுமத்தினர். அவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இந்த ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ராப்ரி தேவியும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியபோதும் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

பின்னர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராப்ரிதேவி, “ஸ்ரீஜன் தொண்டு நிறுவனம் மூலம் பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் அரசு பலகோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது; உண்மை தெரிந்த 6 பேரை வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்து, சாட்சிகளை அழித்துள்ளது” என்றார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலுக்கு நிகராக பீகாரில் ஸ்ரீஜன் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தற்போது நடைபெற்றுவரும் சிபிஐ விசாரணை நிதிஷ்குமாருக்கு சாதகமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்ட ராப்ரி தேவி, உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை மேற்கொள்வதே சரியாக இருக்கும் என்றும் கூறினார்.

Leave A Reply