உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணையும் போது உலகில் பொதுவுடமை சமூகம் அமைந்தே தீரும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார்.
காரல் மார்க்ஸ் 200வது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம் ஆக. 25 அன்று இந்திய தொழிற்சங்கம் சார்பில் பொன்னேரியில் நடைபெற்றது. இதற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார்.

இந்த கருத்தரங்கில் “பொதுவுடைமை சமூகத்தின் தேவை ” என்ற தலைப்பில் நீதிபதி பேசுகையில் முதலாளித்துவத்தில் ஏராளமான கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. காரல் மார்க்ஸ்ஸின் கொள்கைகளை புரிந்து கொண்டு சிஐடியு மட்டுமல்லாமல் அனைத்து தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை உள்ள அனைத்து கட்சிகளும், ஒன்றுபட்டால் தான் சாதி, சமயமற்ற  மாற்றம் சாத்தியமாகும் என்றார்.
இன்றைக்கும் சொத்துக்களும், அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவிந்துள்ளது.90 விழுக்காடு  மக்கள், சொத்துக்கள் ஏதுமின்றி வறுமையில் வாடுகின்றனர். தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால் முதலாளித்துவ ஆட்சியை தொழிலாளி வர்க்கம் தூக்கி எறியவேண்டும். கதிராமங்கலம், நெடுவாசல், நீட், ஜிஎஸ்டி பண மதிப்பு குறைப்பு என எல்லா பிரச்சினைகளுக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உழைக்கும் மக்கள் அனைவரும் எந்த  வித்தியாசமும் பாராமல் ஒன்றிணைந்தால் பொதுவுடமை சமூகம் நிகழ்ந்தே தீரும் என்றார்.

மதுக்கூர் ராமலிங்கம்
தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில்,  மார்க்ஸ் எளிமையான மனிதர். தன் வாழ்க்கையையும் எளிமையாக அமைத்துக்கொண்டு வாழ்ந்து மறைந்தார். யூத குலத்தில் பிறந்த மார்க்ஸ் இறக்கும் போது நாடற்றவன் என்று தன்னை சொல்லிக்கொண்டு இறந்தார். மார்க்சின் கல்லறை லண்டனில் உள்ளது. ஜெர்மனியில் யூத குலத்தில் பிறந்து கிறிஸ்துவராக மாறியவர் என்பதால் அவரை எங்கு புதைப்பது என்ற சிக்கல் எழுந்த காரணத்தால் லண்டனில் அநாதைகளை புதைக்கும் இடத்தில் புதைத்தார்கள்.அவருடைய மனைவி ஜென்னி மார்க்ஸ் அருகில் தான் மார்க்சும் புதைக்கப்பட்டார்.விக்டோரியா மகாராணிகள், ராஜாக்களின் நினைவிடம் அதிகமாக உள்ள நகரம் லண்டன். ஆனால் மார்க்சின் கல்லறையை பார்க்கத்தான் நாள்தோறும் உலகம் முழுவதும் ஏராளமானோர்  வந்து செல்கின்றனர்.இது தான் அந்த மனிதனுக்கு கிடைத்த மரியாதையாகும் என்றார்.

கருத்தரங்கில் மாவட்டப் பொருளாளர் ஆர்.பூபாலன் வரவேற்றார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கோபால் ஆகியோர் பேசினர். தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் கவிஞர் ச.சுரேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பகுதித் தலைவர் கவிஞர் பொன்னி.கு.மகிழ்வரசு ஆகியோர் கவிதைகளை வாசித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.பன்னீர்செல்வம்,பகுதிச் செயலாளர் இ.தவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.புஷ்பா நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: