1968ஆம் ஆண்டு ஜனசங்கத் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா ரயிலில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அந்தப் படுகொலை குறித்த தகவல்களுடன் சில மாதங்கள் கழித்து ஜேம்ஸ் ஷெப்பர்ட் என்ற பத்திரிக்கையாளர் லைஃப் மேகசினுக்கு எழுதிய கட்டுரை.

சுமார் ஐம்பது வயதான உபாத்யாயாவை அவரது நண்பர்களும், ஜனசங்க கட்சித் தொண்டர்களும் கடைசியாகப் பார்த்தது,  பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவிற்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் புதுடெல்லிக்கு தென்கிழக்கே உள்ள ஜான்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து அவரை வழியனுப்பிய போதுதான். கட்சி வேலையாக லக்னோவிலிருந்து பாட்னாவிற்கு அவர் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். லக்னோவைச் சேர்ந்த சோதிடரான தன்பால் சிங் ஜெயின் 1968இன் ஆரம்பத்தில் ஜனசங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுக்கு வன்முறையிலான மரணம் நேரலாம் என்று கூறியிருந்ததால், உபாத்யாயா அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரப்பிரதேச மாநில ஜனசங்க கட்சியின் தலைவராக இருந்த பிதாம்பர் தாஸ் தன்னாலான முயற்சிகளைச் செய்தார்.

ஜான்பூரில் இருந்து அந்த ரயில் கிளம்பிய சில மணி நேரங்களுக்குள்ளாகவே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கிந்திய ரயில்வேயைச் சேர்ந்த முகல்சராய் ரயில் நிலையத்தில் சரக்குப் பெட்டிகளைக் கையாளுகின்ற இடத்திற்கருகே இருந்த தண்டவாளத்திற்கருகே உபாத்யாயாவின் உடல் கிடந்தது. கட்சித் தொண்டர்கள் வந்து அடையாளம் காட்டும் வரையில் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் அவரது உடல் அங்கேயே கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கே வந்து சேர்ந்த காவல்துறையினர், ஒருவேளை உபாத்யாயா ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் அல்லது அந்தப் பெட்டியின் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்த போது வெளியில் இருந்த கம்பங்களில் மோதி இறந்திருக்கலாம் என்பது போன்ற காரணங்களைக் கூறி அது தற்செயலாக நடந்த மரணமாக இருக்கும் என்றே கருதினார்கள். ஆனால் கடந்து செல்லும் பெட்டிகளில் இருந்து மூன்று அடிக்கு அப்பால் அந்தக் கம்பங்கள் இருந்தன. உபாத்யாயாவின் உடல் தலைகுப்புற கிடந்தது மட்டுமின்றி, கால்கள் ஒன்றுக்கு குறுக்காக மற்றொன்று என்றும், முகம் ஒரு சால்வையால் மூடப்பட்டும் இருந்தது. ஓங்கி அடித்ததன் விளைவாக ஏற்பட்ட துளை ஒன்று தலையின் பின்புறம் இருந்தது. மண்டையில் இருந்த எலும்புகள் உடைந்து போய் இருந்தன. கணுக்கால்களுக்கு மேலாக இரண்டு கால்களும்,  எட்டு விலா எலும்புகளும், ஒரு கையும் உடைந்து போயிருந்தன.

தற்செயலாக நடந்த மரணம் என்பது நம்பத்தகுந்ததாக இருக்கவில்லை. ஒருவேளை திருட்டு நடந்து அதன் மூலமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தியவர்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். ஒரு வேளை அவர் முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏதாவது வாங்கலாம் என்று எண்ணியிருப்பாரோ என்ற எண்ணத்தை உபாத்யாயாவின் கையில் ஐந்து ரூபாய் நோட்டு தோற்றுவித்தது.  ஆனால் விடிந்திராத அந்த நள்ளிரவு வேளையில் அவர் தேநீரைத் தவிர வேறு எதையும் வாங்க முடிந்திருக்காது. விலை உயர்ந்த கைக்கடிகாரம் அவரது கைகளிலேயே இருந்தது. அவரது சட்டைப் பையில் 26 ரூபாய் பணம் இருந்தது. அவரில்லாமல் பாட்னாவிற்குச் சென்ற அந்த ரயிலிலேயே, பெர்த்திற்கு கீழாக வைக்கப்பட்டிருந்த அவரது சூட்கேஸ் பத்திரமாக இருந்தது.

இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலை என்று ஜனசங்க கட்சியைச் சார்ந்த ஒருவர் கூறினார். பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும், அந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகள் முடிந்த பிறகே எந்தவொரு முடிவிற்கும் வர முடியும் என்று காவல்துறை சொன்னது. அந்த சம்பவம் குறித்த முழுமையான விசாரணை என்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான  விசாரணயில் இறங்கியிருந்த சிபிஐ, உள்ளூர், உத்தரப் பிரதேச அதிகாரிகள் ஆகியோரை சோதிடர்களைக் கூடக் கலந்தாலோசிக்கின்ற நிலைக்கு இட்டுச் சென்றது.  அவரது பிறந்த நேரத்தைக் கணக்கில் கொண்டு, அவருக்கு மிக மோசமான மரணமே நிகழும் என்று  சில சாமியார்கள் தெரிவித்திருந்தனர். உபாத்யாயாவிடம் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டம் அவருக்கு மிகவும் சங்கடம் ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. அவர் இறந்தது பிப்ரவரி 11. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டால், யார் அதைச் செய்வார்கள் என்பது பற்றி அந்தச் சாமியார்கள் எதுவும் கூறியதாகத் தெரியவில்லை.

தவறுதலான வழிகாட்டுதல்களாக சில இருந்தாலும்கூட, அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டவர்களுக்குத் தேவையான தடயங்கள் கிடைத்தன. அந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களின் பட்டியலை அவர்கள் ஆராய்ந்த போது, உபாத்யாயா தனியாகப் பயணித்த பெட்டிக்கு அடுத்த பெட்டியில் மேஜர்.S.L.சர்மா என்பவரது பெயர் இருந்தது. தான் பனாரஸில் இறங்க வேண்டும் என்பதால் தன்னை எழுப்பி விடுமாறு அந்த மேஜர் தன்னிடம் தெரிவித்ததாக அந்தப் பெட்டியில் இருந்த நடத்துநர் கூறினார். ஆனால் அவரை எழுப்பி விடச் சென்ற போது உபாத்யாயாவின் பெட்டி கதவிற்கருகே நின்ற ஒருவர் மேஜர் சர்மா ஏற்கனவே இறங்கி விட்டதாக ஆங்கிலத்தில் அந்த நடத்துநரிடம் தெரிவித்தார். முகல்சராய் ரயில் நிலையத்திற்கு ஆறு ரயில் நிலையங்களுக்கு முன்னால் இருந்த பைஜாபாத் ரயில் நிலையத்தில் அந்த மேஜர் இறங்கி விட்டதாக அதற்கடுத்த பெட்டியில் இருந்த நபர் தெரிவித்தார். உபாத்யாயாவின் மரணம் நடந்து முப்பத்தி நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த மேஜரை சிபிஐ கண்டு பிடித்தது. இந்திய ராணுவத்தில் இருந்த அவர் பீகார் மாநிலத்தில் உள்ள காமோ நகரைச் சேர்ந்தவர். அந்த விசாரணையில் தான் முக்கியமான நபராக இருப்பதை அந்த முப்பத்தி நான்கு நாட்களும் அறியாதவராகவே அவர் இருந்து வந்திருந்தார்.  லக்னோ ரயில் நிலையத்திற்கு வந்த போது, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த படுக்கை ஏற்கனவே துணை ராணுவ அதிகாரி ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் போக வேண்டிய காமோவிற்குச் செல்வதற்காக இணக்கப்படவிருந்த பெட்டி ஒன்றில் ஒரு பெர்த் காலியாக இருந்ததால் அதில் தான் பயணித்ததாகவும், எனவே உபாத்யாயாவின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் தான் பயணிக்கவில்லை என்றும் மேஜர் சர்மா கூறினார். பைஜாபாத்தில் இறங்கிச் சென்ற மேஜர் சர்மா என்று கருதப்பட்ட அந்த துணை ராணுவ அதிகாரி இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கோடு தொடர்பில்லாதவர் என்பதால் மேஜர் சர்மா விடுவிக்கப்பட்டார்.

அன்று ரயிலில் நடந்த மற்ற சம்பவங்களும் புதிரானவையாகவே இருந்தன. முகல்சராய் ரயில் நிலையத்தில் உபாத்யாயா பயணம் செய்த அந்தப் பெட்டி பிரிக்கப்பட்டு பாட்னா செல்லும் ரயிலோடு சேர்க்கப்பட்டது. முகல்சராயில் அவரது பெட்டிக்குள் நுழைந்த இளைஞன் அவரது படுக்கையை அங்கிருந்து எடுத்துச் சென்றான். பக்கத்துப் பெட்டியில் இருந்த பயணி அது குறித்து அவனிடம் கேட்ட போது தன்னை உபாத்யாயாவின் மகன் என்றும் அவரது உடைமைகளை எடுத்துப் போவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தான். படுக்கையை எடுத்துச் செல்லும் போது அதிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்தன. அதனையெல்லாம் பொறுக்கி எடுத்துக் கொண்ட அவன் மிக சாவகாசமாக அங்கிருந்து வெளியேறிச் சென்றான். பின்னர் அந்தப் படுக்கையை நாற்பது ரூபாய்க்கு அவன் விற்று விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

அந்த ரயிலில் பயணம் செய்யாத நடுத்தர வயதான ஒருவர் பாட்னா ரயில் நிலையத்தில் உபாத்யாயா இருந்த பெட்டியை சுத்தம் செய்யுமாறு பெருக்கிச் சுத்தம் செய்பவரிடம் கேட்டுக் கொண்டார். தனது கைரேகை அல்லது கால் தடங்கள் அங்கே பதிவு பெறாத வகையில் அந்த மனிதர் பெட்டிக்கு வெளியிலேயே நின்று கொண்டார். அந்தப் பெட்டியைச் சுத்தம் செய்தவர் அங்கே ரத்தக் கறை எதுவும் இருக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அந்தப் படுக்கையோடு சேர்த்து உபாத்யாயா கொண்டு வந்திருந்த ஒரு கேன்வாஸ் பையையும் காணவில்லை. சில புத்தகங்கள், குர்தா சட்டை, அவர் அணிந்திருந்த நேரு ஜாக்கெட் ஆகியவற்றை உபாத்யாயா அந்தப் பையில் வைத்திருந்தார். அந்தப் பை, உபாத்யாயாவின் செருப்புகள், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், கண்ணாடி போன்றவை பனாரஸ், முகுல்சராய் என்று மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டன. ஐந்து நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். உபாத்யாயாவின் மரணம், அதாவது கொலை, திருட்டு தொடர்பாக நடந்திருக்கலாம் என்று கருதுவதற்கு வழியிருந்தாலும், அதற்கான ஆதாரங்கள் குறைவாகவே இருந்தன. திருடர்கள் அவரைக் கொன்றிருந்தால், அவரது கைக்கடிகாரம், பணம், சூட்கேஸ் ஆகியவற்றை ஏன் எடுத்துச் செல்லவில்லை? அவரை ஏன் ரயிலில் இருந்து தள்ளி விட்டார்கள் அல்லது தூக்கி எறிந்தார்கள்? மேஜர் சர்மா என்று கருதப்பட்ட அந்த ராணுவ அதிகாரி யார்? யார் அந்தப் பெட்டியை சுத்தம் செய்யச் சொன்னது? எதற்காக சுத்தம் செய்தார்கள்?

தங்களது அரசியல் ஆதாயத்திற்குத் தடையாக இருந்த உபாத்யாயாவை யாரோ ஆளனுப்பியே கொலை செய்திருப்பதாக ஜனசங்கத்தினர் நம்பினர். அந்த ரயில் பனாரஸில் கங்கை நதியின் மீதுள்ள நீளமான இரும்பு பாலத்தின் மீது வந்த போது எழுந்த சப்தத்தில் உதவிக்காக அவர் எழுப்பிய குரல் கேட்காத நிலையில், அந்தப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக ஜனசங்கத்தினரும், விசாரணை நடத்தியவர்களும் கருதினர். உபாத்யாயாவின் மரணம் நன்றகத் திட்டமிடப்பட்டு அவரது பயண விவரங்களை அறிந்தவர்களாலேயே செய்யபப்ட்டுள்ளது என்று ஜனசங்கத்தினர் குற்றம் சுமத்தினர். லக்னோவில் இருந்த உபாத்யாயாவிற்கு பிப்ரவரி பத்தாம் தேதி காலையில்தான் பாட்னாவில் இருந்து தொலைபேசி மூலம் கட்சி கூட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெறவிருந்த மற்றுமொரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், முதலில் உபாத்யாயா பாட்னாவிற்கு செல்ல உடனே ஒத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் பாட்னாவில் உள்ளவர்களுக்கு தெரிவிக்காத நிலையிலேயே, சனிக்கிழமை மாலையில் பாட்னா செல்லுவதற்காக அவர் லக்னோவில் ரயிலில் ஏறினார்.

பிரதமர் இந்திரா காந்தி, அவரது அரசாங்கம் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்தியாவும் இந்தக் கொலையில் இருந்த மர்மத்தின் தீவிரம் பற்றி அறிந்திருந்தனர். ஜனசங்கத்தின் எதிரிகளான முஸ்லீம்கள், கம்யூனிஸ்டுகளால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், தேசம் முழுவதும் வகுப்புவாதக் கலவரம் மூளும் என்பதால் அனைவரிடமும் பதட்டம் நிலவியது. 1911ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் கிளையாக ஜனசங்கம் இருந்தது. தேசப்பிரிவினையின் போது ஹிந்துக்களையும், ஹிந்துப் பாரம்பரியத்தையும் பாதுகாக்க முயன்றது மட்டுமல்லாது, ஏராளமான முஸ்லீம்களை அழித்தொழிக்கும் வகையிலும் ஆர்எஸ்எஸ் செயல்பட்டது. ஆர்எஸ்எஸ்சில் முன்னர் உறுப்பினராக இருந்த ஹிந்து மத வெறியன் ஒருவனால் 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தால் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. 1951ஆம் ஆண்டு சியாமா பிரசாத் முகர்ஜி என்ற வங்காளியால் துவங்கப்பட்ட ஜனசங்கம், பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வு தலை தூக்கியது, காந்தியின் நினைவுகள் மங்கத் தொடங்கியது ஆகியவற்றின் காரணமாக, தனக்கென்று பலமான அடித்தளத்தைப் அமைத்துக் கொண்டது. 1953ஆம் ஆண்டில் காஷ்மீர் சிறையில் இருக்கும் போது முகர்ஜி சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்தார். அவரது ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த ரகுவீரா என்பவரும் 1963இல் ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார்.

1952ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனசங்கம் 30 லட்சம் வாக்குகளை வாங்கியது. கடந்த ஆண்டு (1967) நடந்த தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தையும் விட அதிகமான வாக்குகளை (1.4 கோடி வாக்குகள்) அது பெற்றிருந்தது. டெல்லி நகராட்சி இப்போது ஜனசங்கத்திடம் இருக்கிறது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி அரசாங்கங்களில் அங்கம் வகித்து தனது அடித்தளத்தைப் பரவலாக்கிக் கொண்டுள்ளது. ஹிந்தி திணிப்பிற்கு எதிரான தேசிய இயக்கங்களின் போது ஜனசங்கம் அடக்கி வாசித்தது.

உபாத்யாயா மேற்கொண்ட மிதவாத நிலையை ஜனசங்கம் தொடருமா, இல்லையெனில் ஆர்எஸ்எஸ்சின் வழிகாட்டுதலில் கொடூரமான வழியில் செல்லுமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. உபாத்யாயாவின் இறுதிச் சடங்குகள் முடிந்ததற்குப் பின், அடுத்த நாள் இன்னுமொரு மிதவாதியை, 41 வயதான அடல் பிகாரி வாஜ்பாயியை, தனது தலைவராக கட்சி தேர்வு செய்துள்ளது. உபாத்யாயாவைப் போன்றே ஆர்எஸ்எஸ் வழி வந்தவராக வாஜ்பாயி இருந்தாலும் கொஞ்சம் நெகிழ்வுத் தன்மை கொண்டவராக அவர் இருக்கிறார். ஆனாலும் உபாத்யாயாவை ஒரு முஸ்லீமோ அல்லது கம்யூனிஸ்டோ கொலை செய்தார் என்று கண்டு பிடிக்கப்பட்டால், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த மிதவாதத்தை இல்லாமல் செய்து விடுவார்கள். இப்போது வரையிலும் நாடு அமைதியாக இருக்கிறது. அமைதி தொடர்ந்தாலும்,  வெடிகுண்டு இன்னும் அங்கேயே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

  • தமிழாக்கம் : முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர்

Leave A Reply