புதுதில்லி;
ஜம்மு – காஷ்மீர் மாநில மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 35ஏ மூலம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கை தீபாவளிக்குப் பின்னரே (அக்டோபர் 18) விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்ல் சாரு வாலி கண்ணா என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு ‘35ஏ’ மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநில அரசியல் சாசன விதி 6-இன் கீழ் அம்மாநில மக்களுக்கு நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இப்பிரிவு பெண்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

அம்மாநில பெண் ஒருவர் நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் இல்லாத வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவருக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு உரிமையும் மறுக்கப்படுகிறது. அவரது மகனுக்கும் சொத்துரிமை மறுக்கப்படுகிறது.

நிரந்தர குடியுரிமை சான்று இல்லாத ஒருவரால் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஆனால், சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியாது. இது பாரபட்சமானதாக உள்ளது. எனவே, பெண்களுக்கு எதிரான பிரிவு ‘35ஏ’-வை ரத்து செய்ய வேண்டும்’ என்று அவர் கோரியிருந்தார்.

இம்மனு ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு – காஷ்மீர் மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் ஷோஹேப் ஆலம் ஆகியோர் இவ்வழக்கின் விசாரணையை தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வைத்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, மேற்படி வழக்கின் விசாரணை தீபாவளிக்கு (அக்டோபர் 18) பின்னர் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: