புதுதில்லி;                                                                                                                                                                               காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரள மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இம்மனுக்களை விசாரித்து வருகிறது.

இதில் கர்நாடகா மற்றும் கேரள அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் இறுதிவாதம் நடைபெற்று வருகிறது. வியாழனன்று 8-ஆவது நாளாக தமிழக அரசின் வாதம் தொடருவதாக இருந்தது.

இதற்காக தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே, ராகேஷ் திவிவேதி, வழக்கறிஞர்கள் ஜி. உமாபதி, சி. பரமசிவம் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

ஆனால் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் வேறு பல வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றதால், காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு தாமதமாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனிடையே நீதிமன்றப் பணிகள் முடிவடைவதற்கான நேரம் நெருங்கியதால், இறுதி விசாரணையை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் நிறைவடைவதால், நீதிபதி தீபக் மிஸ்ரா புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே ஆகஸ்ட் 30-ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்கும்போது அவர் தலைமை நீதிபதியாக இருப்பார்.

Leave A Reply