கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தை குறைத்து அவமானப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியிருப்பது கண்டிக்கதத்தகது என பட்டாளி மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கு மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்கான பரிசாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்துறையில் ஏராளமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்தார். பொதுத்தேர்வுகளில் தர வரிசை ரத்து, புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரிடமும் பெறும் வரவேற்பை பெற்றன. அதையெல்லாம் விட ஊழலின் உறைவிடமாக திகழ்ந்த பள்ளிக் கல்வித் துறையில் உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஊழல் செய்ய முடியாத நிலை உருவானதை அடுத்து, அவரை இடமாற்றம் செய்யும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் ஈடுபட்டனர். இம்மாதத் தொடக்கத்திலேயே அவரை இடமாற்றம் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த முடிவை அரசு தற்காலிகமாக கைவிட்டிருந்தது.

உதயச்சந்திரனின் இடமாற்றம் குறித்த சர்ச்சை இப்போது ஓரளவு அடங்கியுள்ள நிலையில், அவரை அதிகாரமற்ற செயலாளராக மாற்றியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். புதியப் பாடத்திட்டத்தை வகுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதன் காரணமாக அவரை முழுமையாக இடமாற்றம் செய்யாமல், பாடத்திட்டப் பிரிவை மட்டும் கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது உதயச்சந்திரனை இடமாற்றம் செய்வதை விட மிக மோசமான தண்டனையும், அவமதிப்பும் ஆகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது மிகப்பெரிய பணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர அதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு எந்தப் பணியும் இல்லை. பாடத்திட்ட பணியையாவது உதயச்சந்திரன் முழுமையாக மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா? என்றால் அதுவும் கிடையாது. அவர் முழுக்க முழுக்க பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், உதயச்சந்திரனை வேறு துறைக்கு அனுப்பி அங்கு அவர் சீர்திருத்தங்களைச் செய்து விடக்கூடாது என்பதற்காகவே அவரை கல்வித்துறையில் அதிகாரமற்ற செயலாளராக அரசு சிறை வைத்திருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரி அல்ல. அவர் மீது பல்வேறு குற்றச்சாற்றுகள் உள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் விருப்பப்படி செயல்படுவதற்காகவே இப்படி ஒரு அதிகாரியை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இத்தகைய நியமனத்தால் பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக சபீதா இருந்த போது ஏற்பட்ட சீரழிவை விட இன்னும் மோசமான சீரழிவுகளை அத்துறை சந்திக்கும்.

பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகளை முன்வைத்த போது அதுகுறித்து விவாதிக்கத் தயாரா? என்று அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்தார். அதை ஏற்ற பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பள்ளிக்கல்வித்துரை ஊழல்கள் மட்டுமின்றி, அத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கத் தயார் என்று அறிவித்தார். அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டவாறு விவாதத்திற்கு ஏற்பாடு செய்து காத்திருந்த போதிலும், அதில் பங்கேற்பதற்கு வராமல் ஓடி ஒளிந்த அவர், இப்போது உதயச்சந்திரனின் அதிகாரத்தை குறைப்பதில் மட்டும் தனது வீரத்தைக் காட்டியிருக்கிறார். தங்களின் நோக்கம் சீர்திருத்தம் அல்ல… ஊழல் தான் என்பதை பினாமி அரசு நிரூபித்திருக்கிறது. பினாமி அடிமைக் கொள்ளையரிடமிருந்து இதைத் தான் எதிர்பார்க்க முடியும்.

தமிழகத்தின் இன்றைய அடிப்படைத் தேவை கல்வித்துறை சீர்திருத்தங்கள் தான். எனவே, பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். இக்கோரிக்கைக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: