இடுக்கி;
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இடுக்கி அணை குறவன், குறத்தி என்ற 2 மலைகளை இணைத்து கட்டப்பட்டதாகும். கேரளத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரிய அணை என்ற பெருமையை உடைய இந்த அணை 555 அடி உயரம் கொண்டதாகும். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் வில் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்ட இந்த அணையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வருவார்கள் . இந்த அணையின் துணை அணையாக செருதோணி அணை உள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த அணையை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

மேலும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் அணையை பார்வை யிட அனுமதி வழங்கப்படும். அணை யை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.20-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

கேமரா, செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை அணைப்பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள், நடக்க முடியாதவர்களுக்காக பேட்டரி கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படும்.

இதே போல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அணைப்பகுதியில் விரைவு படகு சவாரி வசதியும் உள்ளது. இதனால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட்டு ரசித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்வார்கள்.

ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி, செருதோணி அணைகளை பார்வை யிட சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் அணைகளை பார்வை யிடலாம் என அணை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply