ஊரக வளர்ச்சித்துறையில் முறைகேடுகள் அதிகமாக  நடப்பதால் அந்த துறை இயக்குனரை  உடனடியாக  மாற்றாவிட்டால் உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடையும்  என்று  ஊரக வளர்ச்சித்துறை சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் வியாழனன்று (ஆக. 24) ஊரக வளர்ச்சி துறை காஞ்சிபுர மாவட்டத் தலைவர் பரணி தலைமையில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், ஊரக வளர்ச்சித் துறையால் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயலாக்கத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல் நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்வதாக கூறினார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பணிகளை முடிப்பது ஊழியர்களின் பொறுப்பு என  அமுல்படுத்தி வருவதாலும்,உயர் அலுவலர்களின் எல்லை மீறிய தொல்லைகளின் விளைவாகவும் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்றும் இது மிகுந்த  வேதனைக்குரியது. குளோரின் மாத்திரைகள் வாங்கியதிலும், சோலார் பல்புகள் வாங்கியதிலும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்காக  தேவையில்லாத அல்லது அதிக விலை கொடுத்து , அளவிற்கு மீறி வாங்கச் சொல்லி ஊராட்சி ஊழியர்களை நிர்ப்பந்திக்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் தற்கொலைக்கு முயன்றதும் இது போன்ற நிர்ப்பந்தத்தினால் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இத்துறையில் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதால்  6 மாத காலமாக 4000 ஊராட்சிகளுக்கு நிதி அளிக்காமல் அன்றாட நிர்வாகப் பணிகளுக்குக் கூட சொந்த பணத்தை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  இது போன்ற அவல நிலைகளைகளையவும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கவும் வரும் 29 ஆம் தேதி  கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடப் போவதாகவும் ஆக.30 செப்.1 ஆகிய தேதிகளில் அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஊரக வளர்ச்சித்துறையில் நடைபெறும் ஊழல்களை ஆதாரங்களுடன் விளக்கி முறையிடப்போவதாகவும் சுப்பிரமணியன் ஆவேசத்துடன் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சார்லஸ் சசிக்குமார், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் முகம்மது உசேன் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: