தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29வது மாநில மாநாடு ஆகஸ்ட் 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டையொட்டி ஆகஸ்ட் 29ம் தேதி மாலை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ளும் ‘‘உழவர் பேரணி’’ நடைபெறவிருக்கிறது.

இந்தப் பேரணி, பொதுக்கூட்டத்தில் கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய பொதுச்செயலாளருமான ஹன்னன் முல்லா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர். இந்த விவசாயிகள் பேரணியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு தேனி மாவட்டத்திற்கு டிராவல்ஸ் நிறுவனங்கள், வேன், பேருந்து அனுப்பக்கூடாது என்று  தமிழக அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் டிராவல்ஸ் நிறுவனத்தை சார்ந்தவர்கள் முன்பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

தமிழக அரசின், மோசமான ஜனநாயக விரோதமான இந்த நடவடிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முன்வருமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து, பேரணியை வெற்றிகரமாக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு விவசாயிகள் சங்கத்தின் அனைத்து மட்ட அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: