செங்கம் அருகே பக்கிரிபாளையம் ஊராட்சியில் இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், கொடூரமாகத் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் காயம்பட்டு கூட்டுச் சாலை அருகில்  இம் மாதம் 13 ஆம் தேதி நள்ளிரவில் அமானுல்லா என்பவரின் மனைவி சாகிதா (48), ஷானா என்பவரின் மகள் ரிஸ்வானா (8) ஆகியோர் மர்ம நபர்களால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சாகிதா தற்போது கோமா நிலையில் சென்னை அரசு மருத்துவமனையிலும், ரிஸ்வானா பெங்களூரு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோல் பக்கிரிபாளையம்  ஊராட்சிக்குட்பட்ட பெங்களூரு பிரதான சாலையில் வசிக்கும் அஸ்மத்பீ (90), தில்ஷாத்பீ(வயது53) ஆகிய மாமியார், மருமகள் இருவரும் இந்த மாதம் 18 ஆம் தேதி மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்மத்பீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தில்ஷாத்பீ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்விரு சம்பவங்களும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆகஸ்ட் 13 அன்று நடந்த தாக்குலுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 14 அன்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கம் தாலுகா குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அதே கிராமத்தில் ஆகஸ்ட் 16 அன்று இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. காவல்துறையின் அலட்சியப்போக்கே இந்தப் படுகொலைகளுக்கு காரணமாகும்.

தமிழக முதல்வர் உடனடியாக தலையீடு செய்து, இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர கொலை சம்பவங்களைப் புரிந்த மர்ம நபர்கள் அனைவரையும் கைது செய்து பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்குற்ற சட்டத்தின் கீழ்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், படுகொலை செய்யப்பட்ட வர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும், சென்னை அரசு மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் சாகிதாவுக்கு உயர்சிகிச்சை அளிக்க வேண்டும், பக்கிரிபாளையம் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூக மக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 13 அன்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடி தலையீட்டை வலியுறுத்தி மனு கொடுத்தும் அவசரம் கருதி உரிய நடவடிக்கை எடுக்காது அலட்சியப்போக்குடன் நடந்து கொண்ட திருவண்ணாமலை செங்கம் வட்டார காவல்துறையினர் மீது தமிழக அரசை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: