கடந்த சில வாரங்களாக ஆதார் அடையாள அட்டையைப் பற்றிய விவாதம் பெரிதாகியுள்ளது. மத்திய – மாநில அரசின் சமூக நலத் திட்டங்களைப் பெறும் மக்கள் ஆதார் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என அரசுக்கு மிகத் தெளிவான மொழியில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முதல் குரல்

ஏழைகளுக்கு எல்லா நன்மைகளையும் அளிக்கும், கடைக்கோடி இந்தியனுக்கும் மருத்துவ வசதிகளைக் கொண்டுசேர்க்கும் முழக்கங்களுடன் 2009-ல் நந்தன் நிலகேணியின் தலைமையில், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தை மத்திய அரசு நிறுவியது. இதே நேரம் இந்த ஆணையத்தை நியாயப்படுத்தும் வகையில் பல குரல்கள் எழுந்தன. இந்தியா தனது மென்பொருள் திறனை உலகுக்குக் காட்டவே இந்த அடையாள அட்டைத் திட்டம் என்பதுதான் பிரதான குரலாக ஒலித்தது. போலி குடும்ப அட்டைகளை ஒழிப்போம், இந்த அட்டை வந்தால் மகாத்மா காந்தி வேலை உத்தரவாதத் திட்டம் முறையாகச் செயல்படும் என்றெல்லாம் கூறின அடுத்தடுத்து வந்த குரல்கள்.

விழித்திரை, கைரேகை போன்ற உயிரி அளவுகளும், பெயர், முகவரி, பிற குறிப்புகளும், புள்ளிவிவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டு, இதுவரை புழக்கத்தில் உள்ள அடையாள அட்டைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக வடிவமைக்கப்பட்டு 12 இலக்க பிரத்தியேக எண் பொறித்த அட்டையாக அது வழங்கப்படும் என ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதிலும் பெறப்படும் இந்த விவரங்களின் தொகுப்புகளை மத்தியத் தகவல் களஞ்சியத்தில் சேகரிப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

அரசியலைப்புச் சட்ட மீறல்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு தனிமனித சுதந்திரத்தையும் தனிமனித உரிமைகளையும் உறுதியளித்தாலும்கூட, மேற்கு நாடுகளில் இருப்பதுபோல், தனிமனிதனின் அந்தரங்கத்தையும் உரிமையையும் பாதுகாக்கும் பிரத்தியேகச் சட்டங்கள் இங்கு இல்லை. ஆனால், இந்தத் தகவல் களஞ்சியத்தில் இருக்கும் தகவல்களெல்லாம் மொத்த நாட்டு மக்களின் பிரத்தியேகமான, அந்தரங்கமான தகவல்கள். இந்தத் தகவல்களை எப்படிப் பாதுகாப்பது, இத்தனை பெரும் தகவல் தொகுப்பைப் பாதுகாக்க இயலுமா என்பதெல்லாம் இன்றளவும் பெரும் கேள்விகளாகவே உள்ளன. இணையம் என்பது முற்றிலும் பாதுகாப்பற்றது என்பதைப் பல முறை இந்த உலகம் உணர்ந்திருந்தாலும், சமீபத்தில் அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடன் விவகாரம் இது சார்ந்த புரிதலைத் துல்லியமாக்கியது. உலகின் எல்லா இணையச் செயல்பாடுகளும் அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டவைதான் என்பதை ஸ்னோடன் அம்பலப்படுத்தினார். இவற்றையெல்லாம்விட, உள்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை இந்தத் தகவல்களைப் பெற ஆவலாக இருக்கின்றன என்பதை நமக்கு உலகளாவிய அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இப்படித் தகவல்களை ஓர் இடத்தில் குவிப்பது தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானது என்று பல கணினி வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள். இவை எல்லாம் ஒருபுறம் என்றால், இந்தத் தகவல்களை இந்த ஆணையம் முதலில் முறையாகப் பயன்படுத்துமா என்பதே கேள்வியாக உள்ளது.

அரசின் மனதில் இருப்பது என்ன?

இந்த ஆணையம் சேகரிக்கும் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் மசோதாவில் வழிவகை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் அந்த அட்டைக்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய மடிக்கணினிகள் காணாமல் போனது முதல் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இந்தியாவில் வசிப்பவர் என்பதை அடையாளம் காணவே வழங்கப்படுகிற அட்டை பல வெளிநாட்டு அகதிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பது சமீபத்தில் செய்தியானது. நந்தன் நிலகேணியின் சொந்த ஊரான பெங்களூருவில் இதே ஆதார் அட்டையில் மனிதர்களுக்குப் பதிலாக ஆடு, மாடுகள், மரங்களின் படங்கள் இருந்தது கடந்த மே மாதம் பெரும் செய்தியாக வெளிவந்தது. இந்த அட்டையைப் பெறுவதற்கு முதலில் உங்களுக்கு ஒரு முகவரி இருந்தாக வேண்டும். இந்தியாவில் வீடற்றவர்கள் 10 கோடிப் பேர். சாலைகள், நடைபாதைகள்தான் இவர்களின் தற்காலிக வசிப்பிடங்கள். இவர்கள் எப்படி இந்த அட்டையைப் பெறுவார்கள், வங்கிக் கணக்கைத் தொடங்குவார்கள்? மத்திய-மாநில அரசுகளின் எல்லாத் திட்டங்களுக்கும் மட்டுமின்றி, உங்கள் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாகவும் ஆதார் அட்டையை மாற்றும் அளவுக்கு இந்தத் திட்டம் மிக விரிவானது.

வங்கிக் கணக்குகள், ரயில் பயணங்கள், தொலைபேசிகள், வருமான வரி, சேவை வரிகள், ஓட்டுநர் உரிமங்கள், பத்திரப் பதிவு அலுவலகங்கள் என அனைத்துச் சேவைகளையும் கணினி மூலம் இணையத்தின் உதவியுடன் இணைக்கும் பெரும் திட்டம்தான் இதன் பின் (தற்சமயம் மறைவாக) உள்ளது. இனி வரும் ஆண்டுகளில் பொதுவிநியோகப் பொருட்கள், உரம், எரிவாயு சிலிண்டர் என அனைத்துத் திட்டங்களிலும் உள்ள மானியத் தொகையைப் பயனாளிகளின் ஆதார் அட்டையுடன் அவர்களின் வங்கிக் கணக்கையும் இணைத்து அதில் அரசு செலுத்துவதும், அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு வெளிச்சந்தையில் பொருட்களை வாங்க நிர்ப்பந்திப்பதும்தான் முழுத் திட்டம்.

பின்னுள்ள வியாபாரம்

ரூ. 3,000 கோடி என்று தொடங்கிய இந்தத் திட்டம் இன்று ரூ. 1,50,000 கோடி வரை மக்களின் வரிப் பணத்தை விழுங்கி நிற்கிறது. இந்த அட்டைக்குப் பின்னால் ஸ்மார்ட் கார்டு தொழிற்குழுமங்கள், மென்பொருள் நிறுவனங்களின் பெரும் நலன்கள் உள்ளதும் அம்பலப்படுத்தப்பட வேண்டியது. இதனால் மக்களுக்குப் பயன் உள்ளதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், அதன் தலைவர் நந்தன் நிலகேணி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்கிற ஆரூடங்கள் மட்டும் தொடர்ச்சியாக வெளியாகிவருகின்றன. உறுதியாக இந்த அடையாள அட்டை தேசத்தின் நலன் சார்ந்ததுதானா?

இவை எதையும் ஆய்வு செய்யவோ, கணக்கிலெடுத்துக்கொள்ளவோ மறுக்கும் அரசு இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்துக்குச் சட்டரீதியான பாதுகாப்பை அளிக்கும் மசோதாவை வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவர உத்தேசித்துவருகிறது. இந்தியாவின் தேசியக் கட்சிகளோ இந்த அட்டைக்கு எதிராகவோ அதன் அபாயகரமான பின்விளைவுகள் பற்றியோ யோசித்ததாகக்கூடத் தெரியவில்லை.

  • அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர், சமூக ஆய்வாளர் – தொடர்புக்கு: [email protected]

Leave A Reply

%d bloggers like this: