தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா அழைப்பிதழ் தொடங்கி வரிசைகட்டி வரும் பல்வேறு பணிகளை அசுர வேகத்தில் செய்து முடிப்பதற்கு பணம் வாரியிறைக்கப்பட்டுள்ளது.

பிறக்கும்போதே வறுமையில் பிறந்து வளர்ந்து சிறுவயதில் இருந்தே நாடகத்தில் நடித்து திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றி நடித்து கதாநாயகனாக உயர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படங்களில் கூறப்பட்ட அன்றைய சூழலுக்கான அரசியல் கருத்துக்கள் மக்களின் வாழ்வோடு கலந்ததால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

அவருக்கு அதிமுக சார்பில் எத்தனை கோடி செலவு செய்தாலும் கேள்வி எழப்போவதில்லை. ஆனால் மக்களின்  வரிப்பணம் அல்லவா வீணாக்கப்படுகிறது?
பயனாளிகள்?

இந்த விழா ஒரே மாதிரியாக அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடோடு செய்யப்படுகிறது. தலைமைச் செயலகமே இதற்காக விழா நடக்கும் மாவட்டங்களுக்கு இடம் பெயர்கிறது. மக்களின் செல்வாக்கு இந்த அரசுக்கு இல்லை என்பதால் விளம்பர வெளிச்சத்தால் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அரசின் அத்தனை துறைகளும் இறக்கி விடப்படுகின்றன. பயனாளிகள் என்ற பெயரில் பெரும்பாலும் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் பந்தலில் அமர வைக்கப்படுகிறார்கள். அடையாளப்பூர்வமாக ஒரு சிலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஏனையோர் நான்கு, ஐந்து மணிநேர காத்திருப்புக்குப்பின் கலைந்து போகின்றனர்.

இவ்விழாக்களில் முதல் நிகழ்வாக பள்ளி மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எதிர்கால தலைமுறை எம்.ஜி.ஆரின் வாழ்வை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற ஏற்பாடு. பிரம்மாண்ட மேடையின் திரையில் “அச்சம் என்பது மடமையடா” என பாடிக் கொண்டு எம்ஜிஆர் தோன்றுகிறார். தொடர்ந்து அவரது படங்களில் இருந்து “திருடாதே பாப்பா திருடாதே” “சின்னப்பயலே சின்னப்பயலே” “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என பல பாடல்களும் காட்சிகளும் அணிவகுக்கின்றன. ஊடகவியலாளர் ரபி பெர்னார்ட் அழகாக தொகுத்து வழங்குகிறார்.

ஆனால் வரலாற்றைக் கூறும்போது சரியாக சொல்ல வேண்டும் என மனசாட்சி உறுத்தவில்லையா? காலத்தால் அழியாத கவிஞர்கள் மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், உவமைக் கவிஞர், சுரதா, புலமைபித்தன் போன்ற பல கவிஞர்கள் மூளையை செலவழித்து எம்ஜிஆருக்காக செதுக்கிய பாடல்கள் இவை என்பதையும் மறக்கவியலா டி.எம்.சௌந்தர்ராஜன் போன்றோர் இந்த பாடல்களுக்கு எம்ஜிஆருக்கேற்ப உயிர் கொடுத்து பாடியுள்ளார் என்பதையும் மாணவர்களுக்கு சேர்த்துச் சொன்னால்தானே அது நேர்மையான செயல். ஆனால் எல்லாமே எம்ஜிஆர் என்பது போல வரலாறு திரிக்கப்பட்டு மறைக்கப்பட்டு பள்ளிக்குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
கதை சொல்லி

முதல்வர் எடப்பாடியார் பெயரளவிற்கு சிலருக்கு நல திட்ட உதவிகளை வழங்கி விட்டு உரையாற்றுகிறார். அவரது கட்சியில் உள்ள பிரச்சனைகளை குட்டி கதைகள் மூலம் விளக்குகிறார். ஐயோ பாவம் என்று உட்கார்ந்து கேட்கிறார்கள் பயனாளிகள். ஒரு படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்துவார். அதில் ஒரு இடத்தில் “மகாத்மா காந்தி என்ன சொன்னார்” என்ன திரும்பத் திரும்ப கேட்பார். அருகில் இருப்பவர்களிடமும் என்னடா சொன்னார் என்று கேட்பார். அருகில் இருப்பவர்கள் தெரியாது என்பர். வில்லுப்பாட்டு நடத்தும் சுருளிராஜனுக்கும் தெரியாது என்பதால் “உம்” என்ற சத்ததோடு வேறு தகவலுக்கு மாறி விடுவார். அது நகைச்சுவைக் காட்சிதான். அது அப்படியே `கதைசொல்லி’ எடப்பாடியாருக்கும் பொருந்துகிறது.

தமிழகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நெருக்கடிக்கும் காரணமான மோடி அரசிடம் அதிமுக அரசும் அணிகளும் சரணாகதி அடைந்து மாநில உரிமைகளை காவுகொடுத்து வருகிறது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழகஅரசு பயன்படுத்தி வருகிறது. பாவம் அரசு அதிகாரிகள், வியர்க்க விறுவிறுக்க வேலைபார்க்கிறார்கள். நூற்றாண்டு விழா முடியும்வரை வேறு எந்த வேலையும் கிடையாது.
வேகமான பணிகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிற பகுதியில் மட்டும் மாதக்கணக்கில் குண்டும்குழியுமாக கிடந்த சாலைகள் எல்லாம் சரியாகி விட்டது. பாலங்கள் எல்லாம் வெள்ளை ஆடை உடுத்தி பளிச்சென்று உள்ளன. துப்புரவு தொழிலாளர்கள் பலஊர்களிலிருந்து வரவழைக்கப்பட்டு நகரம் தூய்மையாகிறது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, அனைத்துத் துறைகளும் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றனர். விவசாயம் பட்டுப்போய் பாழ்பட்டுபோன டெல்டா மாவட்டங்களால் ஒட்டுமொத்த தமிழகமும் நெருக்கடியில் இருக்கும்போது இவ்வளவு ஆடம்பரம் தேவைதானா?
பெண்களின் சிரமம்

இதுபோன்ற விழாக்களின்போது மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்ட பெண்கள், பெண் அதிகாரிகள், பெண் காவலர்கள் அடைந்த சிரமங்களை எழுத்தில் செல்ல முடியாது. கோடிக்கணக்கில் செலவு என்கிறார்கள். வரும் டிசம்பர் மாதம் வரை இந்தவிழா எல்லா மாவட்டங்களிலும் நடைபெற போகிறது. தற்போது இபிஎஸ் ஓபிஎஸ் இருவருமே இணைந்து காட்சியளிக்க தொடங்கிவிட்டார்கள். நூற்றாண்டு விழா ஓராண்டு நடந்து முடிந்தபிறகு கணக்குபார்த்தால் ஒரு பட்ஜெட் செலவழிந்திருந்தால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியம், அவுட்சோர்சிங் பணி என அல்லாடும் ஊழியர்கள், கடன் தள்ளுபடி கேட்டும் நிவாரணம் கேட்டும் போராடும் விவசாயிகள், வாழ்வின்றி இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்ட சிறு,குறு தொழிற்சாலைகள், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் என பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்கு நிவாரணம் அளிக்க உரிய நியாயம் வழங்க இந்த அரசுக்கு மனமில்லை. 3.50 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு கடன் இருந்தும் இதுபோன்ற விழாவிற்கு வாரி இறைக்க மட்டும் பணமிருக்கிறது. இதற்குப் பெயர்தான் அம்மா ஆட்சியாம்.
– எஸ்.நவமணி

Leave A Reply

%d bloggers like this: