கடலூர் பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் நடைபெற்ற போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர்மாவட்டம் மாளிகைமேடு அருகே உள்ள எஸ்.கே.பாளை யத்தைச் சேர்ந்தவர் சொ.சம்பத் (43). கடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தடம் எண்.9 -ல் கடலூர்-குறிஞ்சிப்பாடி செல்லும் அரசுப் பேருந்தை இயக்குகிறார். வெள்ளிக்கிழமையன்று பேருந்தை கடலூர் பேருந்து நிலையத்தில் அதற்கான இடத்தில் நிறுத்தச் சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையத்திற்குள் கடை வைத்திருக்கும் திமுக பிரமுகரின் கார் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டார்.

எனவே, பேருந்தை சற்று ஓரமாக நிறுத்தி விட்டு, கடைக்குள் இருந்த திமுக பிரமுகரிடம் காரினை அப்புறப்படுத்துமாறு கூறியுள் ளார். இதில் ஏற்பட்ட தகராறில் அக்கடையின் ஊழியர்களால் சம்பத் தாக்கப்பட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட சக ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளை குறுக்காக நிறுத்தி மற்ற பேருந்துகள் வெளியேற முடியாத நிலையை ஏற்படுத்தினர்.

சிஐடியுத் சங்க துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொழிற் சங்கம் நிர்வாகி கருணாநிதி, பாமக தொழிற் சங்க நிர்வாகி ராஜமூர்த்தி, மதிமுக தொழிற் சங்க நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அவர்களிடம் ஏனைய ஓட்டுநர்கள், நடத்துனர்களும் பேருந்து நிலையத்திற்குள் குவிந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
அவர்களிடம் கடலூர் நகர உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் க.நரசிம்மன், காவல் ஆய்வாளர் த.சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காயமடைந்த சம்பத் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தனர். இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பேருந்துகளை இயக்கினர். ஊழியர்களின் இப்போராட்டத்தினால் சுமார் 1 மணி நேரம் அப்குதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply