விருதுநகர், ஆக.24- விருதுநகர் மாவட்டம், எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்டது குப்பாம்பட்டி கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  பேருந்து வசதி சரிவர இல்லாத இக்கிராமத்தில் உள்ள பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியருக்கு யோசனை வந்தது. இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் குழு மற்றும் கிராம மக்களிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கிராம மக்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிதியை பள்ளிக்காக வழங்கினர். மேலும், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், லயன்ஸ் மற்றும் ஒய்ஸ்மென்ஸ் சங்கத்தினரும் நிதிகளை வழங்கினர். இதையடுத்து, மிகப்பெரிய உயர் தொழில்நுட்ப தொடு திரை, கணினி, ஒலி பெருக்கி, நாற்காலி, மேஜைகள் ஆகியவை களுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கூறியதாவது : ஆசிரியர்கள் நேரடியாக மாணவர்களுக்கு சொல்லித்தருவதை விட, ஸ்மார்ட் கிளாசில் உள்ள உயர் தொழில்நுட்ப தொடு திரையில் பாடங்களை கதை வடிவில் மற்றும் நாடக வடிவில் பாடல்களுடன் ஆடிப்பாடி சொல்லித் தந்தால், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். மேலும், இங்கு இணையதள வசதி உள்ளது. எனவே, அதன் மூலம், தேவையான காட்சிப் படங்கள் மூலம் கூடுதலாக விளக்க முடியும். கணினியுடன் தொடுதிரை இணைக்கப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் பல மாணவர்கள், எளிதில் படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், தட்டச்சு செய்தல் போன்றவற்றை யும் பழக முடியும் என தெரிவித்தார்.

ஊர் பொதுமக்கள், அனைத்து பொருட்களையும் ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியில் சேர்த்தனர். பின்பு, நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ப.நடராஜன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வெ.ஸ்ரீராம் வரவேற்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர் இராம லட்சுமி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முருகேசன் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில், ஆசிரியை லட்சுமிகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியை பெ.ராஜா தொகுத்து வழங்கினார். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஊர் பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: