கோவை, ஆக. 24 கோவையில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை வெட்டி கொலை செய்தவழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, கோவை, செங்காடு, பீமா நாராயணசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் ராஜேஸ்குமார் (24). இவர் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அப்போது, ராஜேஸ்குமாருக்கும் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ராமகிருஷ்ணன் (27) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 4.10.2015 அன்று கோவை, வி.கே.கே.மேனன் ரோடு – ஆவாரம்பாளையம் ரோடுசந்திப்பு சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த ராஜேஸ்குமாரை, அங்கு வந்த ராமகிருஷ்ணன், அஜித்குமார், பெட்டி கார்த்தி, சக்திவேல், அருண்பாண்டி, மூர்த்தி, நவீன்குமார் ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணன் உட்பட 7 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழனன்று நீதிபதி குணசேகரன் முன்னிலையில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. இதில் ராமகிருஷ்ணன், அஜித்குமார், பெட்டி கார்த்தி, சக்திவேல், அருண்பாண்டி ஆகியோர் மீதான கொலைக் குற்றம் நிருபிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம்அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட மூர்த்தி, நவீன்குமார் மீதான குற்றம் நிருபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: