அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின்போது தனிமனித தகவல் பாதுகாப்பு, அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. தனிநபர் உரிமை (பிரைவசி) என்பது பன்முகத்தன்மை வாய்ந்ததால் அதனை அடிப்படை உரிமையாகக் கருத முடியாது என்று மத்தியஅரசு கூறியது.

உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (ஆக.24) அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் அரசின் அந்த வாதம் தவிடுபொடியாகியுள்ளது.  சமையல் எரிவாயு மானியம், மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம், வங்கிச் சேவை மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்ததால் நடுத்தர மக்களும் ஏழை, எளிய மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். ரேசன் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்காத அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட்டன. ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. அத்தோடு தனிநபர் உரிமையும் கேள்விக்குறியானது. ‘தனிநபர் உரிமை என்பது அவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பொதுவாக பயன்படுத்துவதில் இருந்து பாதுகாப்பதாகும்.

அவரது தனிப்பட்ட தகவல்கள் தனிப்பட்டதாகவே இருக்க அனுமதிக்க வேண்டும். அமெரிக்காவைப் போல் இந்தியாவில் தனிநபர் உரிமை பாதுகாப்புச் சட்டம் எதுவும் இல்லை. நாட்டு மக்களின் தகவல்கள் அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆதார் தகவல்களை மத்திய அடையாள ஆவண தொகுப்பகம் (சிஐடிஆர்) தான் பாதுகாக்கிறது. இங்கிருந்து தகவல்கள் கசிய வாய்ப்புகள் அதிகம் என்பது அரசு அறியாதது அல்ல. மக்கள் நலத்திட்டங்களில் இருந்து பெரும்பாலான மக்களை கழற்றிவிடவும் அரசுக்கு எதிராகப் போராடுவோரை ஒடுக்கவும் அடிப்படை உரிமை திட்டமிட்டு கேள்விக்குறியாக்கப்பட்டது.  கடந்த ஓராண்டாக நடைபெற்ற இந்த வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும்.

தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளுமே தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21ன் படி அடிப்படை உரிமையே என்று ஆட்சியாளர்களுக்கு நன்றாக உறைக்கும் வகையில் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.  எம்.பி.சர்மா, கரக்சிங் வழக்கில் ‘தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமை இல்லை’’ என்று இதே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை 9 நீதிபதிகளும்ஒருமித்த குரலில் நிராகரித்திருப்பதும் பாராட்டத்தக்கதாகும். முத்தலாக் தீர்ப்பு வந்து இரண்டு நாட்கள் கழித்து உச்சநீதிமன்றத்தில் இருந்து மீண்டும் வந்துள்ள மற்றொரு நல்ல தீர்ப்பால் தனிநபர்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் தகவல்களை பெரும்பாலும் பெருநிறுவனங்களும் தனியார் தகவல் சேகரிப்பு அமைப்புகளுமே கையாளுகின்றன. அவை தனிப்பட்ட நபர்களின் தகவல்களையும் அவர்களது அந்தரங்க உரிமையையும் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. அடுத்தகட்டமாக ஆதாரை கட்டாயமாக்கவேண்டுமா? வேண்டாமா என்பதை ஐந்து நீதிபதிகள் அடங்கியஅமர்வு முடிவு செய்யவுள்ளது. அந்த தீர்ப்பும் மக்களைப் பாதுகாப்பதாக அமையவேண்டும்.

Leave A Reply