பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கட்டணக் கொள்ளை சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆக.18-23 வரை  மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தென்சென்னையில் 200க்கும் மேற்பட்ட குழுக்கள் பிரச்சாரம் செய்தன. இதன் நிறைவாக புதனன்று (ஆக.23) 5 மையங்களில் நிறைவுக்கூட்டங்கள் நடைபெற்றன. மதுரவாயல் பகுதி, நெற்குன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேசியது வருமாறு:
பணமதிப்பிழப்பு செய்த பிறகு லஞ்சம் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது; கல்வி நிலையங்களின் கட்டணக் கொள்ளை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வி நிறுவனம் கட்டுப்பாடின்றி கட்டணம் வசூலிக்கலாம். அதற்கான வரியை கட்டினால் போதுமானது. பிரதமர் மோடி 3 வருடத்தில் 65 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ஆனால், ஒரு ரூபாய் கருப்பு பணத்தைக்கூட மீட்டு வரவில்லை. அந்நிய முதலீடு எவ்வளவு வந்தது என்பதையும் கூற மறுக்கிறார்.

அதிமுகவை இரண்டாக உடைத்து, பின்னர் இணைத்துள்ளது பாஜக. திரைமறைவில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்கிறது. தமிழக அரசு பெரும்பான்மையற்று உள்ளது. மாநிலத்தில் நிலையான ஆளுநரும் இல்லை; முதலமைச்சரும் இல்லை. இருப்பினும், லஞ்சமும், ஊழலும் தங்கு தடையின்றி தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள தொழில்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவை அழித்துவிட்டது. இவற்றிலிருந்து மக்களை திசைதிருப்ப மத, சாதிய மோதலை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. இதன்மூலம் வருணசிரம ஆட்சியை அமைக்கும் பாஜக-வின் திட்டத்திற்கு தமிழக அரசு துணைபோகிறது. மொழி, கல்வி, மத நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக ஒன்றுபட்டு போராடுவோம். மக்களை ஏமாற்றுகிறவர்களை புறக்கணிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்திற்கு 145வது வட்டக் கிளைச் செயலாளர் சி.வி.தாமோதரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, ச.லெனின், பகுதிச் செயலாளர் வி.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.மனோன்மணி, எஸ்.பிச்சையம்மாள், எம்.முருகேசன், டி.ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

விருகம்பாக்கம் பகுதி சின்மயாநகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, பகுதிச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர் என்.ராஜா, பகுதிக்குழு உறுப்பினர்கள் சி.செங்கல்வராயன், ஆனந்த், சாந்தி உள்ளிட்டோர் பேசினர்.

தாம்பரம் பகுதி, பீர்க்கன்கரணையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆர்.நேரு தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், பகுதிச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.வனஜாகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர்கள் க.வெ.ராதாகிருஷ்ணன், யு.அனில்குமார், தா.கிருஷ்ணா மற்றும் முருகானந்தம், பாலாஜி, வல்சலாம், தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

ஆயிரம்விளக்கு பகுதி, புஷ்பாநகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் மு.ப.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், பகுதிச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.மூர்த்தி, வி.தனலட்சுமி, பகுதிக்குழு உறுப்பினர்கள் வெ.இரவீந்திரபாரதி, ஆ.விஜியா, எஸ்.பாலசுப்பிரமணியம், புஷ்பாநகர் கிளைச் செயலாளர் அஜீத் ஆகியோர் பேசினர்.
ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிளைச்செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பகுதிச் செயலாளர் எஸ்.அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் இளம்வழுதி, பாபு உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: