சேலம், ஆக. 24- தானமாக வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லஞ்சம் கேட்பதை கண்டித்து சேலத்தில் சிபிஎம், சிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் வன்னிய அடிகளார், கதிரவன் என்பவர்களால் மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்பிசி) 128 குடும்பங்களைச் சேர்ந்தோர் வீடு கட்டிக்கொள்ள 5.14 ஏக்கர் நிலம் தானமாக தரப்பட்டது.

ஆனால், அந்நிலம் இன்று வரை பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படவில்லை. இச்சூழலில் சமீபத் தில் ஏற்காட்டில் நடந்த கோடை விழாவின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் 5 பேருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள பயனாளிகளுக்கு பட்டா வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட பயனாளிகள் அத்தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான மனோன்மணியை சந்தித்து முறையிட்டபோது, பட்டா வழங்க லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த முறைகேடுகளை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா மற்றும் அதற்குரிய மனையும் வழங்கிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்னுசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் அன்பு, சிபிஐ ஒன்றிய செயலாளர் பாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம், சிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: