ஈரோடு, ஆக.24- ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏரி,  குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார ரூ.9.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி பங்கேற்று பேசுகையில்:- தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியான நிலையில், நீர் நிலைகளை குடிமராமத்து செய்து வரும் காலங்களில் மழை பெய்யும்போது, மழை நீரை தேக்க திட்டம் வகுக்கப்பட்டது.

இதற்காக மாநில அளவில் ரூ.300 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குளம், ஏரி, தடுப்பணைகள் தூர்வாரப்பட்டுள்ளது. ஆங்காங்கு சில பிரச்சனைகள் இருப்பினும், அப்பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கையில், அந்தந்த பகுதி விவசாயிகள், பாசன அமைப்புகள் பங்கேற்புடன், குடிமராமத்து பணிகள் நடக்கிறது. பல இடங்களில் குளங்களில் வண்டல் மண் அள்ள கடந்த 2 மாதமாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அனுமதி வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி துறைக்கு உட்பட்ட குளங்களுக்கு பி.டி.ஓ.,வும், பொதுப்பணித்துறை குளத்துக்கு அத்துறையினரும் அனுமதி வழங்கினர். அதனை வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணித்தனர்.

ஆனால், பல இடங்களில் விவசாயிகள் என்ற பெயரில் 100க்கும் மேற்பட்டவர்கள் அனுமதி இன்றி மண் அள்ளி செல்வது, அதிகாரிகளை மிரட்டுவது பேன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அரசின் விதிப்படி, வண்டல் மண்ணை மட்டுமே குளத்தின் பரப்பில் அகற்றலாம். ஆனால், சில அடி ஆழம் வரை தோண்டி கிராவல் மண்ணை அள்ளி செல்கின்றனர். அவற்றை அள்ள அனுமதி இல்லை. இதனால் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து, உரிய விசாரணைக்குப்பின் அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி இன்றி மண் கடத்துவேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இருப்பினும் மாவட்ட அளவில் 54குடிமராமத்து பணிக்காக அரசு ரூ.9.78 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: