கோவை, ஆக. 24- கோவையில் கழிவு எண்ணை சுத்திகரிப்பு ஆலையிலிருந்து நச்சுக்காற்றை வெளியேற்றும் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் பங்கேற்று பேசுகையில், கோவை மதுக்கரை ஒன்றியம் சீராபாளையம் பகுதியில் ஜெயா டிரேடர்ஸ் தனியார் நிறுவனம் எவ்வித அனுமதியுமின்றி கழிவு எண்ணை சுத்திகரிப்பு ஆலைநடத்தி வருகிறது. இந்த ஆலையிலிருந்து வேதியல் துகள்கள் அதிகளவில் வெளியேறுகிறது.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட பிறகு வரும் கழிவு எண்ணெய்களை விவசாய பூமிக்குள் செலுத்திவருகிறனர். இதனால் நிலத்தடிநீர் பாதிப்புக் குள்ளாவதோடு, விவசாயத்திற்கான நீர் பாசன கிணறுகளில் எண்ணெய்கலக்கிறது, இந்த நீரை கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இதேபோல், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நச்சுக்காற்று சுவாசிப்பதால் சுவாசக்கோளாறு, கண்ணெரிச்சல், கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே இதன் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave A Reply

%d bloggers like this: