தேனி,ஆக.24- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29-வது மாநில மாநாடு கம்பம் நகரில் வருகிற 27 ஆம் தேதி துவங்கிறது. 29ஆம் தேதி பிற்பகலில் உழவர் கலைவிழா, பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29 வது மாநில மாநாடு கம்பத்தில் தோழர் பினாய் கோனார் நினைவு அரங்கில் (கம்பம் என்.நடராஜன் திருமணமண்டபம்) தோழர்கள் ஞானவாசகம் ,எம்.செபஸ்டியான் நினைவு வளாகத்தில் நடைபெறுகிறது.

துவக்க நிகழ்ச்சி: ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு தோழர் கே.பி.ஜானகியம்மாள் நூற்றாண்டு நினைவு ஜோதி,வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி, திருவண்ணாமலையிலிருந்து வரும் கொடி ஆகியவற்றை பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு சங்க கொடியினை முதுபெரும் தலைவர் ஏ.அப்துல் வஹாப் ஏற்றி வைக்கிறார்.  மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது .

பிரதிநிதிகள் மாநாடு: பின்னர் நடைபெறும் பிரதிநிதிகள் மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். வரவேற்புக்குழு தலைவர் கே.ராஜப்பன் பிரதிநிதிகளை வரவேற்று பேசுகிறார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் கே.முகமது அலி முன்மொழிந்து பேசுகிறார். மாநாட்டினை அகில இந்திய இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசுகிறார். பகல் 11.30 மணி அளவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வே.துரைமாணிக்கம் வாழ்த்திப் பேசுகிறார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் பெ.சண்முகம், வரவு- செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் அ.நாகப்பன்ஆகியோர் சமர்ப்பிக்கிறார்கள். அதனைதொடர்ந்து வேலை அறிக்கையின் மீதுபிரதிநிதிகள் விவாதிக்கிறார்கள்.

தலைவர்கள் வாழ்த்து: 28ஆம் தேதி திங்களன்று அமைப்பு குறித்த விவாதம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் கே.வரதராசன், சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொருளாதார நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

நிர்வாகிகள் தேர்வு: ஆகஸ்ட் 29 ஆம் தேதி மூன்றாம் நாள் அமர்வில் பிரதிநிதிகள் விவாதத்திற்கு தொகுப்புரை வழங்கிய பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா மாநாட்டினை நிறைவு செய்து பேசுகிறார். வரவேற்புக் குழு செயலாளர் டி.கண்ணன் நன்றி கூறுகிறார்.

உழவர் கலைவிழா – பேரணி: செய்வாய் கிழமை மாலை 4 மணிக்கு மாநாட்டு அரங்கிலிருந்து உழவர் பேரணி துவங்குகிறது. பின்னர் தோழர் எஸ்.தர்மராஜ் நினைவுத்திடலில் (வ.உ.சி திடல்) நடைபெறும் கலைவிழாவை தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் துவக்கி வைத்துப் பேசுகிறார். ’மதம் எனும் பேய்பிடியாதிருக்க வேண்டும் ‘என்னும் தலைப்பில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் ,’எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை எனும் தலைப்பில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

நிகழ்வில் புதுகை பூபாளம், கரிசல் கருணாநிதி, சிவகங்கை செம்மலர் கலைக்குழு, தேனி செவக்காட்டு நாடகக்குழு, விருதுநகர் மாணவர்களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. பொதுக்கூட்டம் மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கேரள மாநில நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக், அகில இந்திய பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா உள்ளிட்ட தலைவர்கள் பேசுகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: