நீட் தேர்வை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு திணித்து, தமிழகத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சீர்குலைத்திருப்பதை கண்டித்து எதிர்கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

‘தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு வலுக்கட்டாயமாக ஒரு ‘நீட்’ நுழைவுத் தேர்வை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசும் திட்டம்போட்டுத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சீர்குலைத்துவிட்டது.
“நீட்” நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” என்று தமிழக சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் பூட்டி வைத்துக்கொண்டு, சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்பட்டு, தமிழகத்தில் “நீட்” தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருக்கிறது. அது மட்டுமன்றி, மாநில சட்டமன்றத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, மத்திய – மாநில உறவுகளையும் கூட்டாட்சித் தத்துவத்தையுமே கேலிப் பொருள் ஆக்கிட முனைந்து செயல்பட்டுவருகிறது.
மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்துக்கொள்ளும் பா.ஜ.க-வின் இந்த ஆணவப்போக்குக்கு, மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசு ஓங்கிக் குரல்கொடுக்காமல், பணிந்து துணைபோகிறது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 98 சதவிகித மாணவர்கள் மற்றும் மருத்துவ முதுநிலைப்படிப்பில் சேர விரும்பும் அரசு, மருத்துவர்களின் நலனைக் காற்றில் பறக்கவிட்டு, மத்திய – மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கை நடத்தியிருப்பதும், வாதிட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது.
தற்காலிகமாக ஓராண்டு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து, அந்தக் குறைந்தபட்ச விதிவிலக்கும் கிடைக்காத அளவுக்கு, இன்றைக்கு மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்திருக்கும் பா.ஜ.க. அரசின் இரட்டை வேடம், தமிழக மக்களைப் பொறுத்தவரை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில், மாநில அ.தி.மு.க அரசின் நிர்வாகத் திறமை படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
ஆகவே, “நீட்” தேர்வைத் திணித்து, தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை உருவாக்கி, மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த துரோகத்துக்கு சம பங்குதாரர்களாக இருக்கும் மத்திய – மாநில அரசுகளுக்கு ஆர்ப்பாட்டத்தின் போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பலர் பங்கேற்று பேசி வருகின்னறனர். ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: