புதுதில்லி,
அந்தரங்கம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஒருவரின் அந்தரங்கத்திற்கான உரிமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின்கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள ஓர் அடிப்படை உரிமையாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வரவேற்கிறது.

இந்தப் பிரச்சனை மீது இதற்கு முந்தைய பல்வேறு வழக்குகளிலும் மற்றும் எம்.பி. ஷர்மா மற்றும் கரன் சிங் வழக்கிலும் அந்தரத்திற்கான உரிமை, ஓர் அடிப்படை உரிமை அல்ல என்று அளித்திருந்த தீர்ப்புகள் அனைத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஒன்பது பேர் அடங்கிய அரசமைப்புச்சட்ட அமர்வாயம் இப்போதைய தீர்ப்பின் மூலம்  ரத்து (overruled) விட்டது.

உலகம் முழுதும் தொழில்நுட்ப முன்னேற்றமானது கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தின்கீழ் இன்றுள்ள நிலையில் தனிநபரின் அந்தரங்கத் தரவுகளை அவர்கள் துஷ்பிரயோகம் செய்வதிலிருந்தும், தனிநபர்களின் அந்தரங்கங்களைத் தெரிந்துகொண்டு அவர்களை சித்திரவதை செய்வதிலிருந்தும் பாதுகாத்திட முத்திரை பதிக்கத்தக்க அளவிலான இத்தீர்ப்புரை வழிவகுத்திட வேண்டும்.

இந்த அரசாங்கம் ஆதார் அட்டை கட்டாயம் என்று  இப்போது உந்தித்தள்ளிக்கொண்டிருப்பது குறித்து ஐந்து நபர் கொண்ட அமர்வாயம் தனியே விசாரணை செய்து தீர்ப்பு வழங்கிட உள்ளது.”
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: