புதுதில்லி, ஆக. 24 – தனிநபர் ரகசியக் காப்பு உரிமை (அந்த ரங்கம்) என்பது, நாட்டின் குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கமே என்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட விரிவடைந்த அரசியல் சாசன அமர்வு அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு, தனிநபர் சுதந்திரம், தனிநபர் பாதுகாப்புக்கு உறுதி வழங்குகிறது; இதில் தனிநபர் பாதுகாப்பு என்ற அம்சத்தில் தனிநபர் ரகசியக் காப்பும் அடங்கும்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக 1954-ஆம் ஆண்டில் 8 நீதிபதிகள் அமர்வு, ‘தனிநபர் ரகசியக் காப்பு என்பது அடிப்படை உரிமை ஆகாது’ என்று கூறியிருப்பதும், 1962-ஆம் ஆண்டில் 6 நீதிபதிகள் அமர்வு, தனிநபர் அந்தரங்கத்தை அடிப்படை உரிமையில் இருந்து பிரித்து அடையாளம் காட்டியிருப்பதும் சரியானது அல்ல! என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் மத்திய – மாநில அரசுகளின் சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கர்நாடக மாநில உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி புட்டாசாமி, சமூக செயற்பாட்டாளர் அருணா ராய் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

“அந்தரங்க உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ல் ஒரு அங்கமாக உள்ள நிலையில், தனிநபர் ஒருவரின் கைரேகை, கருவிழி ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை ‘ஆதார்’ திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் சேகரிப்பது, குடிமக்களின் அந்தரங்க உரிமையை மீறும் நடவடிக்கை” என்றும் தங்களின் மனுவில் குறிப்பிட்டிருந்த அவர்கள், ஆதார் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். கடந்த ஜூன் 27-ஆம் தேதி இவ்வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, ஆதார்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேநேரம் இறுதி தீர்ப்பு வரும் வரை சமூகநலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆதார் எண்ணுக்காக, பயோ மெட்ரிக் தகவல்களை சேகரிப்பது தனிமனித சுதந்தி ரத்திற்கு எதிரானதா? தனிநபர் ரகசியக் காப்பு அடிப்படை உரிமையாகுமா? என்பதை 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் எனவும் அறிவித்தனர். அதன்படி கடந்த ஜூலை 18-ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “1954-ஆம் ஆண்டில் எம்.பி. சர்மா, 1962-ஆம் ஆண்டில் கரக் சிங் ஆகிய மனுதாரர்களின் வழக்கில் “அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை யாகாது” என்று ஏற்கெனவே 8 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது” என்று சுட்டிக்காட்டி னார். தற்போது அதற்கும் குறைவான நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரிக்க முடியாது என்றும் கூறினார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, ஆர்.கே. அகர்வால், ரோஹிண்டன் பாலி நாரிமன், ஏ.எம். சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கௌல், எஸ். அப்துல் நசீர் ஆகியோரைக் கொண்ட 9 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. “ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடி ஆகத்தக்கதா என்பதை ஆராய்வ தற்கு முன்பு, தனிநபர் ரகசியக் காப்பு அடிப்படை உரிமையா, இல்லையா? என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்” என்று தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தெரிவித்தார். தனி மனித உரிமை தொடர்பான விவகாரம் 9 நீதிபதிகள் அமர்வில் தீர்க்கப்பட்டபின், ஆதார் தொடர்பான மீதமுள்ள பிரச்சனைகள் மீண்டும் சிறிய அமர்வில் விசாரிக்கப்படும்; ஒருவேளை தனிநபர் ரகசியக் காப்பு அடிப்படை உரிமைதான் என்று 9 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்தால், அதன் எல்லையை சிறிய அமர்வு வரையறுக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனடிப்படையில், கடந்த ஜூலை 19-ஆம் தேதி முதல் வழக்கு விசாரிக்கப்பட்டு மனுதாரர்கள், மத்திய அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. தனிநபர் ரகசியக் காப்பு உரிமை அடிப்படை உரிமையே என சோலி சோராப்ஜி, கபில் சிபல், ஆனந்த் குரோவர், அரவிந்த் தாதர் மற்றும் மீனாக்ஷி அரோரா மற்றும் எஸ்.பூவையா ஆகிய அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர்.“பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையில்தான் தனிநபர் அந்தரங்கம் வருகிறது; ஆனால், இதன்கீழ் வரும் பல்வேறு உரிமைகளில் தனிநபர் அந்தரங்கமும் ஒன்றே தவிர, அதற்கு அடிப்படை உரிமை என்ற அந்தஸ்து வழங்க முடியாது; ஒருவேளை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அந்தரங்க உரிமையை அறிவிக்க வேண்டுமென்றால், அதற்கேற்ற அளவிற்கு அது தகுதியாக இருக்க வேண்டும்” என்று அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் குறிப்பிட்டார்.

“தனிநபர் அந்தரங்கத்தை சில அம்சங்களில் மட்டுமே அடிப்படை உரிமையாக கொள்ள முடியும்” என்றார். அப்போது, “எழுத்து வடிவத்திலான அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவான குடியரசில், தனிநபர் ரகசியக் காப்பு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று கூறுவதை ஏற்பது கடினமாக உள்ளது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். “தனி மனித சுதந்திரத்தைப் பறித்துவிட்டு, அதற்குப் பதிலாக வேறு எதையும் உரிமையாக கொடுக்க முடியாது; அப்படி ஒரு உரிமையை வழங்கினாலும் அதனால் எந்தப் பலனும் இல்லை” என்றும் கூறினர். அதேநேரம் “தனி நபர் அந்தரங்கத்துக்கான உரிமை பாதுகாப்பு என்பது அடிப்படை சட்டத்தை விட மேலானதா; குடிமக்கள் மீது நியாயமான காரணங்களுக்காக கட்டுப்பாடுகளை விதித்து, ஓர் அரசு சட்டங்கள் இயற்றுவதை தடுக்க முடியுமா?” என்ற கேள்விகளை எழுப்பினர்.

“தனிநபர் ரகசியக் காப்பு அல்லது அந்தரங்கம் என்பதற்கான வரையறைகள் என்ன? ஓர் அரசால் அந்தரங்கம் என்ற தனியுரிமையை எவ்வாறு ஒழுங்கு முறைப்படுத்த முடியும்?” என்ற கேள்விகளையும் முன்வைத்தனர். “ஆதார் மூலம் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் மீறப்பட்டால், அதற்கு சட்டப்பூர்வ பரிகாரம் இருக்க வேண்டும்; ஆனால், தனிநபர் தகவல் களைப் பாதுகாக்க தனிச் சட்டம் எதுவும் நாட்டில் தற்போது இல்லை” என்பதை மனுதாரர்கள் எடுத்துரைத்த போது, “தகவல் பாது காப்புக்கான உரிமையை, தனி நபர் உரிமை

 

என்று சொல்ல முடியுமா?” என்று அட்டர்னி ஜெனரல் கேட்டார். அப்போது, “ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் என்ற தகவலை ஒரு அரசு பெறலாம்; மாறாக அவர் எத்தனை முறை கருக்கலைப்பு மேற்கொண்டார் என்பதைக் கேட்டு நிர்ப்பந்திக்க முடியாது அல்லவா?” என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதற்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை கோடிட்டுக் காட்டினர். இந்த வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.இந்நிலையில், வியாழக்கிழமையன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தனிநபர் ரகசியக் காப்பு எனப்படும் அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளித்தனர்.

“ஆதார் என்பது ஒருவரது வீட்டின் கதவை தட்டாமலேயே தொழில்நுட்பம் அவர்களது வீட்டுக்கு சென்று விட்டது என்பதன் அடையாளம்” என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் சாடினர். “ஒருவர் தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வீட்டுக்குள் யார் வரவேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம். அதுதான் அவரது மாண்பை காக்கும்.

இது உடல் ரீதியாக மட்டுமல்ல தொழில்நுட்ப ரீதியாகவும் பொருந்தக்கூடியது. யாருடன் வாழ்கிறார், யாருடன் வாழ வேண்டும் என்பது தனிப்பட்ட நபர் விஷயம். அதில் தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறர் தலையிட்டு உளவு பார்ப்பது மாண்பை குலைக்கும் செயல். மாண்பு காப்பாற்றப்பட வேண்டும். குடும்பம், திருமணம், பாலியல் சார்பு போன்ற குடும்பம் சார்ந்த அந்தரங்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவையெல்லாம்தான் தனி நபர் மாண்பை காப்பாற்ற உதவும்”. என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். தனி நபர் ரகசியக் காப்பு என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் படி அடிப்படை உரிமையே என்று 9 நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக இந்த தீர்ப்பை வழங்கினர்.

‘தனிநபர் ரகசியக் காப்பு என்பது அடிப்படை உரிமை ஆகாது’ என்று 1954-ஆம் ஆண்டில் பி. ஜெகன்னாததாஸ் தலைமையிலான 8 நீதிபதிகள் அடங்கிய அமர்வும், தனிநபர் அந்தரங்கத்தை அடிப்படை உரிமையில் இருந்து பிரித்து அடையாளம் காட்டி 1962-ஆம் ஆண்டில் நீதிபதி என்.ராஜகோபால அய்யங்கார் தலைமையிலான 6 நீதிபதிகள் அமர்வும் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல’ என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தினர். ஆதார் எண்ணுக்காக பயோ மெட்ரிக் தகவல்களை சேகரிக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு இந்த தீர்ப்பு வலுவான தடையாக மாறியுள்ளது. இதையடுத்து, தனிநபர் ரகசியக் காப்பு உரிமையின் வரம்பு- அந்த உரிமைக்கான எல்லையை, உச்ச நீதிமன்றத்தின் சிறிய அமர்வு முடிவு செய்யும். அத்துடன் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்தும் விஷயத்திலும் உச்ச நீதிமன்றத்தின் சிறிய அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும்.

யெச்சூரி வரவேற்பு: உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ள பின்னணியில், இதற்காகப் பாடுபட்ட அனைத்து வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

பாசிச சக்திகளுக்கு விழுந்த அடி: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த வெற்றி; அதேநேரம் பாசிச சக்திகளுக்கு விழுந்த ஒரு பெரிய அடி என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கண்காணிப்பு அரசியலின் மூலம் அடக்குமுறையை ஏவும் பாஜக கொள்கைக்கு எதிரான வலுவான குரலாக தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திரம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது: அரசியல் சாசனச் சட்டம் உருவான நாளிலிருந்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். 1947-ல் வென்ற சுதந்திரம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது; இதன் மூலம் அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-க்கே ஒரு புதிய பெருமை கிடைத்துள்ளது; இதன்படி இந்தியத் தண்டனைச் சட்டம் 377-ஐயும் புதிய விதமாக அணுக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆதார் சட்டமாயினும் எந்த ஒருசட்டமாயினும் அறிவுக்கும், நியாயத்துக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருப்பதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு மிகச் சரியே! – அட்டர்னி ஜெனரல் தனி நபர் ரகசியத்தைக் காப்பது அடிப்படை உரிமையே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வரவேற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புமத்திய அரசின் தலையில் வைக்கப்பட்ட குட்டு என்றாலும் அதை மிகச்சரியான தீர்ப்பு என்று கே.கே. வேணுகோபால் வரவேற்றுள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: