அதிலும் இன்னும் சிலபேர், முதலாளித்துவத்தை வாழ வைக்க வேண்டும் என்று கருதுகிற சிலபேர், சில புதிய எண்ணங்களையெல்லாம் கூட சொன்னார்கள். சில எண்ணத்தைச் சொல்லி முதலாளிகளுடைய மனதை மாற்றினால், அதற்குப் பிறகு சம உடைமை சமுதாயம் வராதா? என்று கேட்டார்கள். சில முதலாளிகள் திருந்தினால், அவர்கள் மக்களுடைய சொத்தைத்தானே நாம் அனுபவிக்கிறோம் என்கிற உள்ளுணர்வைப் பெற்றுவிட்டால், அதற்குப் பிறகு சமுதாயம் மாறாதா? என்று கேட்டார்கள். ஆனால் மிகத் தெளிவாக நமக்குத் தெரியும். புலி தன்னுடைய உடலிலே இருக்கிற புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் மாற்றிக் கொள்ளும்; ஆனால், முதலாளித்துவம் தன்னுடைய வசதியை, வாய்ப்பை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்காது.

மாமேதை லெனின் அவர்கள், மார்க்சினுடைய இந்தத் தத்துவத்தை சோவியத் நாட்டிலே நிலை நாட்டினார். சோவியத் நாட்டிலே நிலை நாட்டினார்  என்று நான் குறிப்பிடுவதற்கு காரணம், ஜரோப்பாவினுடைய கிழக்குப் பகுதியிலிருந்து ஆசியாவினுடைய கிழக்குப் பகுதி வரை, உலக நிலப்பரப்பிலே ஆறிலே ஒரு பகுதியை கொண்டிருக்கின்ற பூமி. நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்டிருக்கின்ற பூமி. அந்த சோவியத் நாட்டில், அதற்கு முன்னாலே ரஷ்யாவிலே மனித வாழ்க்கை என்பது; அனுபவித்தே தீர வேண்டிய ஆயுள் தண்டனையாக இருந்தது.

 

எந்த ஆதிக்கக்காரனாக இருந்தாலும், எந்தச் சுரண்டல்காரனாக இருந்தாலும் மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்து, அவனைப் பணிய வைத்தால் தான் பணிவானே தவிர, அவன் தானாக என்றைக்கும் சமுதாயத்தின் முன்னாலே மண்டியிட மாட்டான். முதலாளிகள் வசதிகளை விட்டுக் கொடுத்து, அவர்கள் சம உடைமைக்கு சம்மதிப்பார்கள் என்பதற்கு, பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார். “துச்சாதனனைப் போய் திரௌபதிக்கு சேலை வாங்கித் தரச் சொல்லலாமா?” என்று கேட்டார். அந்த அளவிலே தான் முதலாளித்துவ சமுதாயம் தானாக மாறாது! மார்க்ஸ் ஓர் அருமையான தத்துவத்தைச் சொன்னார். முதலாளித்துவம் தனக்குள்ளேயே எதிரியை வளர்த்து, தனக்குள்ளேயே பகையைக் கருக் கொண்டு அதன் மூலமாகத் தானாகவே அழியும்; தானாகவே வீழும்! ஆனால், அந்தப் பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமானால், புரட்சிகள் தேவை! போராட்டம் தேவை! ஏழை தன்னை உணர வேண்டிய அவசியம் நிச்சயமாக இருக்கிறது. இந்த உழைக்கும் வர்க்கத்தினுடைய தலைப்பிரசவமாய் இருந்த பாரீஸ் கம்யூன், அதைப் போலவே பிரெஞ்சுப் புரட்சி, இவைகளையெல்லாம் வைத்துக் கொண்டு பார்த்தால், முதலாளித்துவத்தோடு என்றைக்கும் தொழிலாளி வர்க்கம் சமரசம் செய்து கொண்டு வெற்றியைப் பெற முடியாது. முதலாளித்துவத்தினுடைய அழிவிலே தான், முதலாளித்துவத்தினுடைய சாம்பல் மேட்டிலே தான், உழைக்கும் வர்க்கத்தினுடைய புதிய நலன்கள் பூக்க முடியுமே தவிர, முதலாளித்துவத்தோடு பேரம் பேசி ஒரு புதிய தத்துவத்தைக் கொண்டு வர முடியாது.

மாமேதை லெனின் அவர்கள், மார்க்சினுடைய இந்தத் தத்துவத்தை சோவியத் நாட்டிலே நிலை நாட்டினார். சோவியத் நாட்டிலே நிலை நாட்டினார் என்று நான் குறிப்பிடுவதற்கு காரணம், ஜரோப்பாவினுடைய கிழக்குப் பகுதியிலிருந்து ஆசியாவினுடைய கிழக்குப் பகுதி வரை, உலக நிலப்பரப்பிலே ஆறிலே ஒரு பகுதியை கொண்டிருக்கின்ற பூமி. நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்டிருக்கின்ற பூமி. அந்த சோவியத் நாட்டில், அதற்கு முன்னாலே ரஷ்யாவிலே மனித வாழ்க்கை என்பது; அனுபவித்தே தீர வேண்டிய ஆயுள் தண்டனையாக இருந்தது. அப்படிப்பட்ட சோவியத் நாட்டில் இந்தத் தத்துவத்தை லெனின் நிலைநாட்டிக் காட்டினார். நிலை நாட்டிக் காட்டியதற்கு மற்றொரு காரணம், மார்க்சியத்தை முழுமையாக தெளிவாகத் திட்டவட்டமாகப் புரிந்து கொண்டார். ஏனென்றால், பலபேர் இனிமேல் முதலாளித்துவ சரக்கு விலை போகாது என்ற காரணத்தினால், அரசியல் சந்தையிலே சோசலிசம் என்கிற முகமூடியோடு உலா வந்தார்கள். அந்தப் போலி சோசலிஷ்டுகளின் முகமூடிகளைக் கிழித்தெறிந்தும் மார்க்ஸ் அன்றைக்கே காட்டினார்.

மார்க்சினுடைய வரலாற்றை படித்தவர்கள் அறிவார்கள். அவர் வாழ்ந்த காலத்திலே, ‘புருத்தோன்’ என்பவன் ‘வறுமையின் தத்துவம்’ என்று திசை திருப்புகின்ற ஒரு கொள்கையை எழுதினான். மார்க்ஸ் அதற்கு எதிர்ப்பிரசுரத்தை வெளியிட்டார். ‘தத்துவத்தில் வறுமை’ என்று சுயம்வர மண்டபத்திலே பல போலி நளன்கள் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், உண்மையான நளன் யார்? என்று கண்டுபிடிக்க முடியாத நிலைமை தமயந்திக்கு ஏற்பட்டதைப் போல், மக்களைக் குழப்புகின்ற வகையில் தங்களது அரசியல் சுரண்டலுக்காக சூதாட்டக் காயாகச் சோசலிசத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால் , லெனின் அதை முறையாகப் புரிந்து கொண்டு, தெளிவாக சோவியத் நாட்டிலே நடைமுறைப் படுத்திக் காட்டினார்.

அந்த சோவியத்தை வீழ்த்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் முயன்றன. எப்போதுமே ஏகாதிபத்தியவாதிகளுக்கு, எங்காவது கம்யூனிச சித்தாந்தம் முளைவிட்டால், அரும்பினால் அதை உடனே கருக வைப்பதற்கு என்ன வழி என்று தான் சிந்திக்கும். சிஐஏ- வுடைய நடவடிக்கைகளை பற்றி ஒரு புத்தகத்தை நான் படித்த போது சில குறிப்புகளைப் பார்த்து அயர்ந்து போய் விட்டேன். எந்த அளவுக்கு முதலாளித்துவ நாடுகள் சிந்திக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். கியூபாவுடைய ஜனாதிபதி ‘ பிடல் காஸ்ட்ரோ’ இருக்கிறார். அந்தச் சின்னஞ்சிறிய நாட்டை என்னன்னவோ அச்சுறுத்திப் பார்த்தும் அமெரிக்காவாலே அசைக்க முடியவில்லை. ஓர் அற்புதமாக அந்த நாட்டை அவர் நடத்திச் செல்கின்றார். இந்த சிஐஏ- காஸ்ட்ரோவைக் குறி வைக்கிறது. அவருடைய உயிருக்கு உலை வைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்களிடத்திலே அவருக்கிருக்கின்ற கவர்ச்சியை, ஆற்றலை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறது.

அதற்கு அந்த சிஐஏ அதிகாரிகளே ஒரு குறிப்பைத் தருகிறார்கள். ‘ காஸ்ட்ரோ ‘ அழகான குறுந்தாடி வைத்திருக்கிறார். அந்தக் குறுந்தாடியின் காரணமாக, மக்கள் அவர் மீது அதிகமான அன்பைச் செலுத்துகிறார்கள் என்று ஒரு குறிப்பைத் தருகிறார்கள். அந்தக் குறிப்பை வைத்துக் கொண்டு அந்தத் தாடியை எடுக்க வைப்பதற்கு என்ன வழி என்பதற்காக, ‘ பிடல் காஸ்ட்ரோ’ அணிந்திருக்கின்ற பூட்சில், ‘ சயனைட் ‘ என்கிற இரசாயனப் பொருளைத் தூவினால் அந்தத் தாடி ரோமம் ஒவ்வொன்றாக உதிர்ந்து விடும். ஆகவே, அப்படி முயற்சி செய்து பார்க்கலாமா? என்று கூட சிஐஏ நடவடிக்கை எடுக்கின்றது. நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் ‘பிடல் காஸ்ட்ரோ’ வினுடைய தாடி ரோமத்தை எடுத்தாலாவது, தம்முடைய முதலாளித்துவக் கொள்கையை வாழ வைக்க முடியாதா? என்கிற அளவுக்கு சிஐஏ திட்டம் தீட்டுகிறது என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்த்தாக வேண்டும்.

லெனின் அதனாலே தான் குறிப்பிட்டார். உலகயுத்தம் என்பது, போர் என்பது எப்படி உருவாகிறது? முதலாளித்துவத்தின் முற்றிக் கனிந்த வடிவமாகிய ஏகாதிபத்தியம் தான், உலகயுத்தத்திற்கே கருப்பை என்று லெனின் குறிப்பிட்டார். சமாதானம் இருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடிய சக்தி, ஏகாதிபத்திய சக்தி தான் என்று குறிப்பிட்டார். காரணம், மார்க்ஸ் அவர்கள் ஓர் அருமையான, அற்புதமான தெளிவுரையை வழங்கிவிட்டுப் போயிருக்கின்றார். அதை உருவாக்கித் தருவதற்கு அவர் எவ்வளவு துன்பப்பட்டார் என்பதனை நாம் எண்ணிப் பார்த்தாக வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: