தமிழக முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை அதனால் முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அளித்திருந்தனர். அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய அவைத்தலைவருக்கு பரிந்துரை செய்திருப்பதாக அதிமுக கொறடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, டிடிவி தினகரன் 19 ஆதரவு எம்.எல்.ஏ-கள் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து ஆளும் அதிமுகவிற்குள் மீண்டும்  சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவு ஆட்சி கவிழும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதற்கிடையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அவைத்தலைவரை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  இதனை தொடர்ந்து  தமிழக அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், பேரவையில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அவைத்தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணையின்படி, அதிருப்தி உறுப்பினர்கள் தகுதியின்மைக்கு ஆளாவதாக விளக்கம் அளித்தார். மேலும் கட்சி தாவல் தடைச் சட்ட விதிகளின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் தலைமைக் கொறடா ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இன்று காலை பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம், முன்னாள் பாஜக நிர்வாகியும், தமிழக அமைச்சருமான பாண்டியராஜன் ஆகியோரை சந்தித்து திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, எச்.ராஜா, பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என மனு அளித்துள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே  மாலையில் டிடிவி தினகரன் ஆதரவு அதிருப்த்தி எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply