சேலம், ஆக.24- சேலம் செவ்வாய் பேட்டை மயானத்தில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் மின்சார தகன மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சி 28வது வார்டுக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை வண்டி பேட்டை பகுதியில் மயானம் உள்ளது. அன்னதானப்பட்டி, நெத்திமேடு, செவ்வாய்பேட்டை, அரிசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை இந்த மயானத்தில்தான் அடக்கம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு, மாநகராட்சி சார்பில் மயானத்தில் ரூ.1.30 கோடி மதிப்பில் மின்சார தகன மேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அம்மயானத்தில் உடல்களை அடக்கம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன்பின் மின்சார தகன மேடை அமைக்கும் பகுதியை சுற்றிலும் 5 ஏக்கர் பரப்பிலான இடத்தில் 50க்கும் மேற்பட்ட சமாதிகள் இருந்தன. அவை அனைத்தும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டு, அந்த இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் இப்பணிகளை மாநகராட்சி செயற்பொறியாளர் காமராஜ், சூரமங்கலம் உதவி ஆணையர் கணேசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: