“நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசின் முடிவை எதிர்த்து வியாழனன்று சென்னையில் நடந்த போராட்டத்தில் தலைவர்கள் பேசியது வருமாறு:- மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்திருப்பதால் கிராமப்புற, நகரப்புற மாணவர்கள், ஏழை-எளிய மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மத்திய பாஜக ஆட்சியும், அதற்கு தமிழகத்தில் துணை நிற்கும், குதிரை பேரம் மூலம் ஆட்சி நடத்தும், எடப்பாடி தலைமையிலானஅதிமுக அரசும்தான்.

இந்த நீட் தேர்வுக்கு முதன் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசுதான். அன்றைக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த வரைக்கும் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை திமுக ஆட்சி. அப்போது திமுக தொடர்ந்த வழக்கில் ‘நீட்’ தேர்வு செல்லாது என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், அந்த வழக்கை திரும்பப் பெற காரணமாக இருந்ததுதான் பாஜக ஆட்சி. மத்தியில் பாஜக ஆட்சி வந்தபிறகு, அந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்து விசாரணை முடிவதற்குள் மக்களவையில் சட்டம் கொண்டு வந்து நீட் தேர்வை நிறைவேற்றியிருக்கிறார்கள். நீட் தேர்வு குறித்து தீர விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. ஆனால், இதுவரைக்கும் அதுகுறித்து மத்திய அரசு வற்புறுத்தவில்லை. மாநிலத்திலுள்ள அதிமுக ஆட்சியும் அதுபற்றி சிந்தித்துப் பார்க்கவில்லை. விரும்பாத மாநிலங்களை விட்டுவிட்டு மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை நடத்துங்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது. அதையும் மீறி நீட் தேர்வை புகுத்தியிருக்கிறார்கள்.

சமூகநீதியைக் கெடுக்கத்தான் நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டு வந்திருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டிலுள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையையும் நசுக்கும் பாஜக ஆட்சி, கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாவதை விரும்பவில்லை. தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களையும் இருட்டறையில் அடைத்து வைத்து தமிழக சட்டமன்றத்தை கேவலப்படுத்திய பாஜக ஆட்சியிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகுவைத்துள்ளது அதிமுக அரசு. நீட் தேர்வு மட்டுமல்ல, நாட்டுமக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வெற்றி கிடைக்கும் வரைக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என்று சபதம் ஏற்போம். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

Leave A Reply

%d bloggers like this: