சென்னை, ஆக.24- நீட் தேர்விலிருந்து விலக்கு பெறாததற்கு கண்டனம் தெரிவித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேப்பாக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது வருமாறு:- மத்திய-மாநில அரசுகள் ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் போது மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம். சட்டமன்றத்தில் ஏகமனதாக 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் முதல் தீர்மானம் மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதாகும்.

எம்.எஸ்., எம்டி படிப்பு முடித்தவர்கள் எம்.சி.எச்., டிஎம் 3 வருடம் படிக்கக் கூடிய சிறப்பு மருத்துவப் படிப்பு தமிழகத்தில்தான் உள்ளது. முன்பு 85 விழுக்காடு ஒதுக்கீடு இருந்தது. அதில் தற்போது 50 விழுக்காடு இடங்களை மத்திய அரசு பறித்துக் கொண்டது. 85 விழுக்காடு இடங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்பதுதான் 2ஆவது தீர்மானம்.  தீர்மானம் நிறைவேற்றி 6 மாதங்கள் ஆகியும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத் தரவுமில்லை. ஆனால் 6 மாதமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி பிரதமர் மோடியை சந்தித்தனர். தமிழக மக்களின் ஒட்டு மொத்தக் குரல், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எனவே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தால்தான் குடியரசுத் தேர்தலில் வாக்களிப்போம் என இருவரும் எச்சரித்திருக்க வேண்டாமா? நெருக்கடி கொடுத்திருக்க வேண்டாமா?

விலங்கு வதைச் சட்டம் பொதுப் பட்டியலில் இருந்தது. மாணவர்களின், இளைஞர்களின் எழுச்சியால் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பியதும் பிரதமர் மோடி உடனடியாக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தர வில்லையா? ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசிடம் போராடியதைப் போல் நீட் தேர்விற்கும் வலுவாகப் போராடியிருக்க வேண்டாமா? மாணவர்கள் நலன் குறித்து அதிமுக அரசுக்கு அக்கறையில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வருடத்திற்கு விலக்கு கேட்டு சட்டம் இயற்றி அனுப்புங்கள், அதற்கு ஒப்புதல் தருகிறோம் எனக் கூறினார். அதை நம்பி மீண்டும் சட்டமன்றத்தில் ஒரு வருடத்திற்கு விலக்கு கேட்டு தீர்மானம் போட்டு ஒப்புதலுக்காக அனுப்பியது. சட்ட அமைச்சகம் கூட ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கலாம் எனத் தெரிவித்தது. ஆனால் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த போது மத்திய அரசின் வழக்கறிஞர் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது எனத் தெரிவித்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்க தடை விதித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய போது, அதில் தலையிட அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியது. இப்படி அனைத்து வகையிலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறது. தமிழக அரசு தொடர்ந்து வாய்மூடி மவுனம் காக்கிறது.அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்தது கொள்கைக்காகவோ அல்லது தமிழக மக்களின் நலன் காக்கவோ அல்ல. அவர்களது ஊழல்சொத்தையும், பதவியையும் பாதுகாக்கத்தான். எனவே இந்த அரசு ஆட்சியில் தொடர்வதற்குத் தகுதியில்லை. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் பேசினார். மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொன்குமார், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: