புதுடெல்லி : தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள தனிமனித சுதந்திரத்தை ஆதார் மீறுகிறதா என்பது குறித்த வழக்கு இன்று 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன  அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது.  இந்த விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தனிமனித உரிமையையும், அடிப்படை உரிமையையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. தனிமனித ரகசியங்களை பாதுகாப்பது என்பது அரசின் கடமை. இது மூன்றாவது நபருக்கு செல்வது சரியல்ல என தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு வழங்குகளின் தீர்ப்பு விபரங்களையும் சுட்டி காட்டி தனி உரிமை என்பது அடிப்படை உரிமைதான் என தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம் அரசு அனைத்து திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்பதை முன்னெடுத்து செல்ல முடியாது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கியதற்கு பொதுமக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பல்வேறு மாநிலங்கள் மூலம் மாநில நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை அரசு திட்டங்களுக்காக தன்னலம் கருதி கட்டாயமாக்க கூடாது என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதமாக உத்தரவை மீறி அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வலியுறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், “இந்தியாவில் ஆதார் வைத்திருப்போர்களில் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் வெளிப்படையாக சமீபத்தில் கசிந்துள்ளதாக வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் மூலம்தான் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறைந்தளவு பாதுகாப்பே இதுபோன்ற நடைமுறைகளுக்கு முக்கிய காரணம்’’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு சார்பாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

இதையடுத்து அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள தனி மனித சுதந்திரத்தை ஆதார் மீறுகிறதா என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான சலமேஷ்வர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்கே.அகர்வால், ரோகிந்தன் நாரிமன்,  ஏ.எம்.சப்ரே,  சந்திராசூட்,  சஞ்சய் கிஷன் கவுல்  மற்றும் அப்துல் நசீர் ஆகிய 9 நீதிபதிகள் கொண்ட உயர் அரசியல் சாசன அமர்வு தீவிர விசாரணையை மேற்கொண்டது.

இந்த அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்கள் அரவிந்த் தட்டார், கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், சியாம் திவான், ஆனந்த் குரோவர், சி.ஏ.சுந்தரம், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலும் அளித்தனர்.

வழக்கில் பாஜ கட்சி ஆட்சியில் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் பஞ்சாப், கர்நாடகா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் பாஜ ஆளும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சார்பாகவும், ‘தனிமனித உரிமையும் அடிப்படை சட்ட உரிமையும் ஒன்றுதான் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆதார் வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்து விட்டதாகவும் இதுகுறித்தான இறுதி தீர்ப்பை ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றம் இந்த மாதம் முதல் வாரத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஆதார் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பிரசாந் பூஷன்

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந் பூஷன், அரசு தனி நபர் ரகசியத்தில் தலையிட்டால் அந்த கொள்கையே ரத்தாகும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: