தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவின் உறுப்பினர்களை மாற்றத் தடை விதிக்க வேண்டும் என்று  ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குழுவை மாற்ற இடைக்காலத் தடை விதித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் தாக்கல் செய்த பதில்மனுவில் கூறியிருப்பதாவது:
பாடத்திட்டம் மற்றும் தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக பரிந்துரை அளிக்க 3 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும். மாநிலத்தின் புதிய பாடத்திட்டம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிபிஎஸ்இ-யை விட சிறப்பாக அமைக்கப்படும்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள்  2018-ம் ஆண்டு மே மாதம் 1,6,9,11 வகுப்புகளுக்கு வழங்கப்படும். 2019 மே மாதம் 2,7,10,12 வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிந்து புத்தங்கள் வழங்கத் தயாராக வைக்கப்படும். 2020 மே மாதம் 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வழங்கத் தயாராக வைக்கப்படும்.
2020 மே மாதத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிக்கப்படும். இதேபோல மின்னணு புத்தகங்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ-யை விட சிறப்பாக அமைந்திருக்கும்.

மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எளிதில் எதிர்கொள்ள ஆங்கிலத்தில் உள்ள ‘நீட்’ தேர்வு புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட அளவில் பயிற்சி மையங்கள் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மத்திய நூலகங்கள் அமைக்க ரூ. 72 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply