தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  2016 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் குழுக்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் இருவரும் புதனன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சிறந்த நாவலுக்கான கே.பி. பாலச்சந்தர் நினைவு விருதை ‘முகிலினி’ பெறுகிறது. நாவலாசிரியர் இரா.முருகவேள் எழுதிய இந்த நூலை பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகநாதன் நினைவு விருது ‘ஆதிமுகத்தின் காலப் பிரதி’ நூலுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர் இரா.பூபாளன் எழுதிய இந்த நூலை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது.

சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருதினை எழுத்தாளர் அ. கரீம் எழுதிய ‘தாழிடப்பட்ட கதவுகள்’ பெறுகிறது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நூல் இது.
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் அப்பணசாமி மொழியாக்கத்தில், எதிர் வெளியீடு நிறுவனம் கொண்டுவந்துள்ள  ‘பயங்கரவாதி எனப் புனையப்பட்டேன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது ‘தீண்டாமைக்குள் தீண்டாமை – புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்’ நூலுக்கு வழங்கப்படுகிறது. பேராசிரியர்கள் சி. லஷ்மணன், கோ.ரகுபதி இணைந்து எழுதிய இந்த நூலை புலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான இரா.நாகசுந்தரம் நினைவு விருதினை ‘மணிமேகலை பன்நோக்கு வாசிப்பு’ நூல் பெறுகிறது. முனைவர் கா.அய்யப்பன் எழுத, காவ்யா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

சிறந்த தொன்மைசார் நூலுக்கான கே.முத்தையா நினைவு விருது ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ நூலுக்கு வழங்கப்படுகிறது. இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

த மு எ க ச வழங்கும் கு.சி.பா அறக்கட்டளை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது ‘மாயக்கண்ணாடி’ நூலுக்கு வழங்கப்படுகிறது.  உதயசங்கர் எழுதி நூல்வனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.

மொழிவளர்ச்சிக்கு உதவும் சிறந்த நூலுக்கான விருது ஆ.இரா. வெங்கடாசலபதி எழுதிய ‘எழுக, நீ புலவன்!’ நூலுக்கு அளிக்கப்படுகிறது. இதனை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நாகர்கோவில் நகரில் செப்டம்பர் 16 அன்று நடைபெற உள்ள தமுஎகச விழாவில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படும். அந்த விழாவில் நூல்கள் குறித்த ஆய்வரங்கமும் நடைபெறும்.

Leave a Reply

You must be logged in to post a comment.