சிலைகளை வைத்து வழிபடும் விழாக்களை கொண்டாடுவது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமலும், நடைபாதையை ஆக்கிரமிக்காமலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுவதை உறுதிப்படுத்த தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இதே போன்று பத்து நாட்கள் விழா கொண்டாடுவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதுடன், ஒலிமாசு பிரச்சனையும் ஏற்படும் எனக்கூறி, மூன்று நாட்கள் மட்டும் கொண்டாடவும், சிலைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தக் கோரியும்  சென்னை ஜார்ஜ் டவுண் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரும் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் புதனன்று (ஆக 23) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
சென்னை மாநகர காவல் ஆணையரின் அனுமதியின்றி எந்த சிலையும் வைக்கக் கூடாது.  மாசு ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் வேதி பொருட்கள் கலந்த சாயம் பூசப்படாத களி மண் சிலை மட்டுமே வைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது. அதேபோல ஒலி மாசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களால் பந்தலை அமைக்கக் கூடாது. மின் திருட்டு தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் டான்ஜெட்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் மின் இணைப்புக்கு டான்ஜெட்கோ விடம் உரிய அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெற வேண்டும். அடுத்த ஆண்டு முதல் சிலைகள் வைக்க மாநில அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும் .
இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave A Reply