உடுமலை, ஆக. 23- உடுமலை பகுதிகளில் வறட்சியால் காய்ந்து போன தென்னை மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உடுமலை கோட்டாச்சியர் அலுவலகத்தில் புதனன்று வட்டாட்சியர் தயானந்தன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில், தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இதனால் பல ஆண்டுகள் வளர்ந்து காய்ந்து போன தென்னை மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவிப்பின்படி குளங்களை தூர்வரும் நடவடிக்கையை உடுமலை ஊராட்சி அலுவலகம் முறையாக செயல்படுத்துவது இல்லை. மண் எடுக்க அனுமதி கேட்கும் விவசாயிகளை அலைக்லைக்கும் ஊராட்சி அலுவலக ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உடுமலை பகுதியில் எவ்வளவு விவசாயிகளுக்கு முன்னுரிமை படி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்திக்கு வறட்சி நிவாரண நிதியாக வந்த ரூபாய் 134 கோடியில் ரூ.52 கோடி திருப்பிஅனுப்பப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நிவாரணம் கிடைக்காமல் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். எனவே, மாநில அரசிடமிருந்து போதிய நிதியை பெற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் இருந்து உழவர் சந்தைக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை காரணம் இல்லாமல் நிறுத்தியதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் இல்லை. குறிப்பாக வெறி நாய்கள், கால்நடைகளை கடித்தால் அதற்கு மருந்து அளிக்கப்படுவதில்லை.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதேபோல், பாசன வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.முன்னதாக, இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனண், நிர்வாகிகள் உடுக்கம்பாளையம் பரமசிவம், பாலதண்டபாணி, ராஜகோபால், ஜல்லிபட்டி கோபால் மற்றும் விவசாயிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: